தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட திட்டமிட்டு நடத்தப்படும் வேல் யாத்திரையை தடை செய்க! – மே பதினேழு இயக்கம்
பாரதிய ஜனதா கட்சி வரும் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை திருத்தணி துவங்கி திருசெந்தூர் வரை வேல் யாத்திரை செல்வதாக அறிவித்துத்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளையும், கருத்துகேட்பு கூட்டங்களையும், ஆதரவை திரட்டும் வேலையையும் கடந்த சில வாரங்களாக பாஜக செய்து வருகிறது. பாஜகவின் இந்த வேல் யாத்திரை, அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டை மதக்கலவரங்கள் மூலம் சீரழிக்க முயலும் திட்டமே. வேல்யாத்திரை என்னும் பெயரில், மதத்தின் அடிப்படையில் தமிழர்களை பிளவுபடுத்த முயலும் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் இந்த திட்டத்தை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
பாஜக தனது அரசியல் பலனுக்காக வடமாநிலங்களில் ரத யாத்திரை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ்-இந்துத்துவ கருத்துகளை விதைத்து, வெறுப்பின் மூலம் வெவ்வேறு மதத்தவர்கள் இடையே சமூகப்பிரிவினையை உண்டாக்குவதை ஒரு வேலைத்திட்டமாக வைத்துள்ளது. வடக்கில் இராமனை வைத்து செய்யப்பட்டு வந்த அதே வழிமுறையில், இன்று பெரும்பான்மை தமிழர்கள் வணங்கும் தமிழ்க்கடவுள் முருகனை வைத்து வேல் யாத்திரை என்ற பெயரில் தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வேலையை பாஜக திட்டமிட்டு செய்கிறது.
தமிழர்கள் காலங்காலமாக முருகனை வழிபட்டு வருகின்றனர். அலகு குத்துவது, பால்குடம் எடுப்பது, காவடி தூக்குவது, பாதயாத்திரை செல்வது, மொட்டை அடிப்பது என முருக வழிபாடு செய்வதே தமிழர்களின் மரபாக இருக்கிறது. இந்த ஆன்மிகம் தமிழர்களின் சமூகத்தை, அரசியலை என்றும் உள்ளிழுத்துக் கொண்டதில்லை. ஆனால் பாஜக முன்வைக்கும் வேல் யாத்திரை மேலே சொல்லப்பட்ட தமிழர்களின் மரபான வழிபாட்டு முறைகளை முற்றிலும் மறுத்து, ஆன்மீகமல்லாமல், அரசியலை முதன்மைபடுத்தி, சமூகத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்டுள்ளன. இவை தமிழர்களின் முருக வழிபாட்டுக்கு மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்திற்கே எதிரான வடநாட்டு அரசியலை முன்வைக்கிறது.
1990ம் ஆண்டு அத்வானி நடத்திய ராம ரத யாத்திரை சென்றமிடமெல்லாம் திட்டமிட்ட கலவரங்கள் மூலம் ரத்த வெள்ளக்காடாக மாறியது. அதன் இறுதியாக அயோத்தியில் பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது. அந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று தான் வேல் யாத்திரை முடியுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. அப்படியானால், மீண்டும் கலவரம் நிறைந்த ஒரு ராம ரத யாத்திரையை நிகழ்த்த தான் இந்த வேல் யாத்திரை என்பது அனைவரும் புரிந்துக்கொள்ள கூடியது. மேலும், டிசம்பர் 6 என்பது புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள் கூட. நான் இந்துவாக சாக மாட்டேன் என்று கூறி பௌத்தம் தழுவிய அண்ணலின் நினைவு நாளில் இந்துத்துவத்தை மையப்படுத்திய யாத்திரையை முடிப்பது அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் செயலாகும்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டு தேர்தலை மனதில் கொண்டே இந்த வேல் யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. முருகனை வாக்கு வங்கியாக மாற்றும் செயலை பாஜக முன்னெடுக்கிறது. இந்த வேல் யாத்திரை மூலம், திட்டமிட்டு மதக்கலவரங்களை உருவாக்கி, சிறுபான்மை மத தமிழர்களை சக தமிழர்களிடம் எதிரிகளாக சித்தரித்து, அதன்மூலம் இந்துக்கள் வாக்கு பாஜகவிற்கே என்று முழக்கத்தை தான் இந்த வேல் யாத்திரை முன்வைக்கிறது. இத்தகைய வடஇந்திய அரசியலை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது தமிழ் சமூகத்தில் ஆபத்தான விளைவுகளை உண்டாகும். இதனை தடுத்து நிறுத்தாவிட்டால்,தமிழ்க்கடவுள் முருகனை சக சிறுபான்மை மத தமிழர்களின் எதிரிகளாகவே மாற்றிவிடுவார்கள்.
மதநல்லிணக்கத்திற்கு பேர் போன தமிழ்நாட்டில் அரசியல் லாபத்திற்காக முருகனை பயன்படுத்தி வேல் யாத்திரை செல்வது சமூக விரோத செயல். கொரோனா காலத்தில் 10 பேர் கூடி சிறு போராட்டம் நடத்துவதற்கு கூட தடை போடப்படும் வேளையில், ஆயிரக்கணக்கானோர் கொண்ட காவி கும்பல் ஊர் ஊராக சென்று மதக்கலவரம் நடத்த முயலும் இந்த யாத்திரையை காவல்துறை எந்த வகையில் அனுமதிக்க முடியும்? தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவுவதற்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கும் காவல்துறையே துணைபோக முடியுமா? ஆகவே, தமிழ்நாடு காவல்துறை இந்த வேல் யாத்திரையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
அரசியல் லாபத்திற்காக மதத்தின் அடிப்படையில் தமிழர்களை பிளவுபடுத்தி தமிழர்களிடையே பகைமையை உண்டாக்க துடிக்கும் பாஜகவிற்கு அதிமுக அரசு துணை போகக்கூடாது. வடஇந்திய அரசியல் தமிழ்நாட்டில் எப்போதும் எடுபட்டதில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. பாஜகவின் இந்த வேல் யாத்திரை பலனை விட தீய விளைவையே தரும் என்பது உறுதி. அப்படிப்பட்ட சூழலில், தமிழக அரசு இந்த யாத்திரைக்கான தடையை உறுதி செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கத் தோழர்களே! இந்த வேல் யாத்திரை நடைபெறும் பட்சத்தில், யாத்திரை செல்லும் இடங்களில் எல்லாம் அனைத்து முற்போக்கு ஆற்றல்களுடன் கைகோர்த்து துணிந்து போராடுவோம். தமிழ்நாட்டில் ‘வெறுப்பு அரசியல்’ மூலம் தமிழர்களை பிரிக்க நினைக்கும் பாசிசத்தினை சனநாயக வழியில் எதிர்கொள்ள அணியமாவோம்!
மே பதினேழு இயக்கம்
9884072010
05/11/2020