தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், பத்திரிக்கையாளரை தரக்குறைவாகவும், மே 17 இயக்கம் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய அர்ஜூன் சம்பத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், பத்திரிக்கையாளரை தரக்குறைவாகவும், மே 17 இயக்கம் பற்றி அவதூறு பரப்பும் வகையிலும் பேசிய அர்ஜூன் சம்பத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், சமீபத்தில் ரெட்பிக்ஸ் (RedPix) இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது, கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க இயலாததால், நேர்காணல் செய்த ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் அவர்களை, அவர் சார்ந்த மதத்தை குறிப்பிட்டு அவர் மீது தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டார். மேலும், அவர் குறிப்பிட்ட ஒரு மதத்தினை சார்ந்தவர் என்பதனால் அவர் தமிழனல்ல என்று கூறியதோடு, அர்ஜுன் சம்பத் கடுமையான வார்த்தைகளை கொண்டு மிரட்டும் தொனியிலும், மரியாதைக் குறைவாக ஒருமையிலும் பேசினார். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை ஏற்றத்தாழ்வோடு நடத்த முயன்ற அர்ஜுன் சம்பத்தின் செயல் மிகவும் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ரெட்பிக்ஸ் ஆசிரியர் சார்ந்த மதத்தை குறிப்பிட்டு, நீங்கள் தான் தமிழர்களை காட்டிகொடுத்தவர்கள் என்றும், திருப்பூர் குமரனை கொன்றவர்கள் என்றும், கட்டபொம்மனை தூக்கிலிட்டவர்கள் என்றும், நாட்டை சுரண்டி தின்றவர்கள் என்றும் குறிப்பிட்ட மதத்தின் மீது கடுமையான வசை சொற்களை பயன்படுத்தி தரக்குறைவாக பேசினார் அர்ஜுன் சம்பத். குறிப்பிட்ட மதத்தை தாக்கி பேசியது என்பது தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலானது. முற்றிலும் தவறான வரலாற்று தகவல்களை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் அமைந்தது அர்ஜுன் சம்பத்தின் பேச்சு.

அதேபோல், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் பெயரை குறிப்பிட்டு, ஈழத்தமிழர்களை அழிக்கும் வேலையை செய்வதாகவும், ஈழத்தமிழர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதாகவும் தவறான தகவல்களை பதிவு செய்தார். மேலும் தோழர் திருமுருகன் காந்தியை சிறையில் அடிப்போம் என்று மிரட்டவும் செய்தார். மே பதினேழு இயக்கத்தின் மீதும், தோழர் திருமுருகன் காந்தியின் மீதான மக்களின் நன்மதிப்பை உடைக்கும் வகையில், அவதூறும் பரப்பும் நோக்கில் அவர் பேச்சு இருந்தது. அர்ஜுன் சம்பத்தின் இந்த பேச்சை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நேர்காணலின் போது கேள்விகளுக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாவிட்டால், தனிநபர் தாக்குதல்கலில் ஈடுபவதையும், மிரட்டுவதையும் இந்துத்துவ கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் தான் ரெட்பிக்ஸ் ஆசிரியரை கையாண்ட விதத்தை காண முடிகிறது. அதேபோல் தோழர் திருமுருகன் காந்தி மீது தொடர்ச்சியான அவதூறுகளை காவி கும்பல் வைத்து வருவது அனைவரும் அறிந்ததே. அது தற்போது கைது செய்வோம் என்று மிரட்டும் வரையில் சென்றுள்ளது. அர்ஜுன் சம்பத் போன்ற இந்துத்துவ அடியாட்களின் இந்த போக்கு மிகவும் கடுமையான முறையில் கண்டிக்கப்பட வேண்டும்.

வரலாற்றுத் தகவல்களை திரித்து கூறுவதும், குறிப்பிட்ட மதத்தை தாக்கி கலவரத்தை தூண்ட முயற்சிப்பதும், தமிழ்நாட்டின் அமைதியை, மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து வெறுப்பின் மூலம் அரசியல் இலாபம் அடைய முயற்சிக்கும் அர்ஜுன் சம்பத் போன்ற இந்துத்துவ காவிகளின் இந்த செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழர்களையும், ஈழத்தமிழர்களையும் எதிரிகளாக பார்க்கும் அவர்களின் மனப்பான்மைக்கு தமிழர்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மதநல்லிணக்கம் நிறைந்த, சமூகநீதி மண் என்பதை உணர்த்த வேண்டும். தமிழர்களும், பத்திரிகை துறை சார்ந்த நண்பர்கள் அர்ஜுன் சம்பத்தின் செயலை கண்டிக்க முன்வருவதோடு, அவரையும் அவரை சார்ந்த இந்துத்துவ கூட்டத்தையும் புறக்கணிக்கவும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply