தமிழர் கடலில் நடந்த மிக முக்கிய மாற்றம்: தெற்காசிய பிராந்தியத்தின் சமநிலை மாறுகிறது

தமிழர் கடலில் நடந்த மிக முக்கிய மாற்றம்: தெற்காசிய பிராந்தியத்தின் சமநிலை மாறுகிறது

தென் சீன கடல் பகுதியில் உள்ள மிக முக்கியமான கடல்வழி பகுதி இருக்கக்கூடிய நாடு கம்போடியா. அந்த நாடு கடந்த வாரத்தில் அதிரடியான சில வேலைகளை செய்தது. அந்த செயலானது தெற்காசிய பிராந்தியத்தின் சமநிலையை மாற்ற கூடியதாகவும், குறிப்பாக அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு சவால்விடும் வண்ணமாகவும் அமைந்திருக்கிறது.

அதாவது கம்போடியாவில் கடந்த பல வருடங்களாக இயங்கி கொண்டிருந்த அமெரிக்காவின் கடற்படை தளத்தை மீண்டும் அந்த நாட்டு அரசிற்கு கொடுக்க கம்போடிய அரசு மறுத்திருக்கிறது. அதோடு சமீபத்தில் அதாவது அக்டோபர் ஒன்றாம் தேதி அமெரிக்க கடற்படை தளத்தை வெடிவைத்து தகர்த்து விட்டது. அதோடு அந்த இடத்தை மறு சீரமைப்பு செய்யும் வேலையையும், அந்த இடத்தை நிர்வகிக்கும் வேலையையும் அடுத்த முப்பது வருடங்களுக்கு சீனாவிடம் கொடுத்துவிட்டது. கம்போடியாவில் இந்த செயல் அமெரிக்காவின் இராஜதந்திர தோல்வியாகவும், சீனாவின் மிக முக்கியமான வெற்றியாகவும் அரசியல் அரங்கில் கருதப்படுகிறது.

ஏனென்றால் சீனா தற்போது தங்களுக்கு தேவையான எண்ணெயை ஈரானிலிருந்து இந்தியப்பெருங்கடல் என்கிற தமிழர் கடலில் இலங்கைக்கு கீழாக அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக மலேசியா சிங்கப்பூர் இடையே இருக்கிற ‘மலாக்கா நீரிணை’ வழியாக தென்சீனக்கடலுக்குள் புதுந்து சீனாவை அடைகிறது.

இந்த வழித்தடம் சீனாவிற்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை தரக்கூடியது என்பதை சீனா உணர்ந்தே இருக்கிறது. ஆகவே இதற்கு மாற்றாகத்தான் மலேசியாவிற்கு மேலே தாய்லாந்துக்கு சொந்தமான இடத்தில் ‘கே ஆர். ஏ கால்வாய்’ (KRA canal) என்னும் ஒரு செயற்கை கப்பல் செல்லும் பாதையை வெட்டி அதன் மூலம் நேரடியாக தென் சீனக் கடல்க்குள் நுழையும் திட்டத்தை சீனா முன்மொழிந்தது. இது பொருளாதார ரீதியிலும் சீனாவுக்கு பயன்தரக்கூடியது. ஆகவே இதனை செயல்படுத்த சீனா முனைந்த போது அமெரிக்கா உள்ளே நுழைந்து தாய்லாந்திடம் பேசி இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுத்து விட்டது.

ஆனால் இன்று சீனாவின் இந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்னேற்பாடாக இந்த திட்டம் அமைய இருக்கும் கடல் பகுதிக்கு அருகில் இருக்கிற கம்போடியாவில் கடற்படைதளத்தை சீனா கைப்பற்றியுள்ளது. இது அமெரிக்காவின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்று பார்க்க முடியும்.

அதோடு இந்தோனேசியாவில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்துகளை பெருமளவில் இப்போது சீனா தான் அந்த நாட்டிற்கு வழங்கி வருகிறது. இதுவும் இந்தோனேசியா முழுக்க அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து சீனாவை நோக்கி நகர்ந்து வருவதாக ஒரு கருத்தும் இருக்கிறது.

ஆக தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கி வருகிற சூழல் உருவாகி இருக்கிறது. இதை தடுப்பதற்காகவும் அல்லது தனது மேலாதிக்கத்தை செலுத்துவதற்காகவும் தான் அமெரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா ஜப்பான் இணைந்து ராணுவ பயிற்சி என்கிற பெயரில் கடற்படை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இப்படி ஏகாதிபத்திய நாடுகள் தெற்காசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய போர் பதட்டத்தை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். நாம் இன்னொன்றையும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். மேற்ச்சொன்ன அனைத்து நாடுகளிலும் பரவி வாழும் ஒரே இனம் தமிழினம் ஆக இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டால் இந்த ஏகாதிபத்திய நாடுகளில் போர்ச்சூழல் யாரை பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நமக்கென்று இருந்த ஒரே அரணும் 2009 அழிக்கப்பட்டிருக்கிற நிலையில் தமிழினம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் நம்முன் இருக்கும் கேள்வி.

மே17 இயக்கம்
9884072010

Leave a Reply