திண்டுக்கல் சிறுமி கலைவாணியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்

திண்டுக்கல் சிறுமி கலைவாணியை பாலியல் பலாத்காரம் செய்து மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றவாளியை போதிய ஆதாரங்கள் இல்லையென்று கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்-மே 17 இயக்கம்

திண்டுக்கல் மாவட்டம் ஜி.குரும்பட்டியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி கலைவாணியை கடந்த 2019 ஆம் வருடம் பாலியல் வன்கொடுமை செய்து மிகக் கொடூரமான முறையில் அந்த குழந்தையின் வாயிலும், மூக்கிலும் மின்சார கம்பிகளை செலுத்தி கொலை செய்த கொடூர குற்றவாளியான கிருபாணந்தனுக்கு எதிராக போதிய ஆதாரமில்லை என்று திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் விடுதலை தீர்ப்பு அளித்துள்ளது.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்து வரும் இந்நேரத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசும் காவல்துறையும் முறையாக விசாரணை செய்து உரிய ஆதாரங்களை சமர்பிக்காமல் விட்டது ஏன் என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் எழுகிறது.

ஏற்கனவே காவல்துறை இது போன்ற சம்பவங்களில் விரைவாக குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்றும் போக்குடனே நடந்து வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சிறுமி கலைவாணி விசயத்தில் கூட இந்த குற்றவாளியை கைது செய்ய காவல்துறை பெரிய அளவு தயங்கிய போது தமிழ்நாட்டின் இயக்கங்களும் பெண்கள் சங்கமும் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாகவே காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு கைது நடவடிக்கையே நடைபெற நேர்ந்தது. களநிலவரம் இம்மாதிரியாக உள்ள நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லை என குற்றவாளி கிருபானந்தனை நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது காவல்துறையின் இந்த போக்கிற்கும் வலுசேர்ப்பதாகவே அமையும்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகான தமிழக அரசின் மெளனமும் அதற்கான மேல்முறையீடு செல்வதற்கான தயக்கமும் தமிழகம் ஏதோ உத்திரபிரதேசம் போன்ற ஆட்சி நடக்கும் மாநிலமாக மாறியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது?

திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினை முன்வைத்து தமிழ்நாடு முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (09/10/2020) தமிழ்நாடு முழுவதும் முடி திருத்தும் நிலையங்களை அடைத்து நடக்கும் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கும் ஆதரவு அளிக்கிறது.

எனவே சிறுமி கலைவாணியை பாலியல் வன்கொடுமை செய்து கொடுரமான முறையில் கொலைசெய்த குற்றவாளிக்கு வழங்கப்பட்ட விடுதலைத்தீர்பிற்கு எதிராக தமிழக அரசு உடனடியாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இது போன்ற பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து வழக்கை முடிப்பதற்காக இதற்கென சிறப்பு விரைவு நீதிமன்றங்களை மாவட்டந்தோறும் ஏற்படுத்த வேண்டும்.

இந்த சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகளை திறமையாக கையாண்டு குற்றவாளிகள் சட்டத்தின் கைகளில் இருந்து தப்பிப்பதை தடுக்கும் வகையில் இதற்கென தனியான இந்த துறையில் போதிய பயிற்ச்சி பெற்ற வழக்கறிஞர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்.

அரசு தரப்பு வழக்கு பெரும்பாலும் காவல்துறையின் விசாரணை முடிவின் அடிப்படையிலேயே நடத்தப்படுவதால் இது போன்ற வழக்குகளில் காவல்துறையினரின் மெத்தனப்போக்கை தடுக்கவும், தங்களது கடமையை சரிவர செய்யாமல் குற்றவாளிகளுக்கு ஆதராவாக செயல்படும் காவல்துறையினர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் மூலம் குற்றவியல் நடவடிக்கைக எடுக்கவும் உரிய வழிகாட்டு நடைமுடைகளை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையினையும் மே பதினேழு இயக்கம் முன்வைக்கிறது.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply