இந்துத்துவ மோடி அரசே! தொழிலாளர்களை வஞ்சிக்கும் புதிய தொழிலாளர்கள் சட்டத்தை உடனடியாக கைவிடு! மே17 இயக்கம்
கொரோணா பெருந்தொற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது,விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமைகளை பறித்து அதை முதலாளிகளுக்கு ஏகபோகமாக பகிர்ந்தளிக்கும் வேலையை இந்த மோடி அரசு திட்டமிட்டு செய்து வருகிறது. அதன்படிதான் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கும் விதமாக தொழிலாளர் விரோத சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி இருக்கிறது.
நாட்டில் தொழிலாளர்கள் நலனைக் காப்பதற்காக இதுவரை இருந்த 44 சட்டங்களையும் சுருக்கி நான்கு சட்டங்களாக மாற்றி அதனை உறுப்பினர்கள் யாரும் இல்லாத நேரத்தில் நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு.
இந்த சட்டத்தின்படி ஏற்கனவே 100க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள தொழில் நிறுவனம் மூடப்படுவதற்கு முன்னர் தொழிலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது அல்லது ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் அரசின் அனுமதியை பெற வேண்டும் என்பது தற்போது 300க்கும் அதிகமான தொழிலாளர்களை பணியில் அமர்த்தி உள்ள நிறுவனங்கள் என மாற்றப்பட்டது. ஆக 300க்கும் குறைவாக தொழிலாளர்கள் உள்ள நிறுவனங்கள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நிறுவனங்களை மூடலாம் .
2) தொழிலாளர்களின் பணியிடம் சார்ந்த சுகாதாரம் பாதுகாப்பு மற்றும் பணிச்சூழல் குறித்த அம்சங்களை புதிய தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நிறுவனங்களிடமே அளிக்கப்பட்டு இருப்பது மிக மோசமான செயல்.
3)மின்சாரத்தை பயன்படுத்தாமல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணிபுரியும் இடம் தொழிற்சாலையாக கருதப்படும் என்ற குறைந்தபட்ச அளவு தற்போது 20 என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல மின்சாரத்தை பயன்படுத்தும் இடங்களில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றினால் அது ஒரு தொழிற்சாலையாக கருதப்படும் என்பது தற்போது 40 என அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த தொழிலாளர்கள் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு சுகாதாரம் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கும்.
4) தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தங்கள் நலனுக்காக உருவாக்க நினைக்கும் யூனியன்கள் அதற்கான விதிகள் ஆகியவற்றை இனி அரசு தான் முடிவு செய்யும் என்கிற திருத்தம் மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
இப்படி மிக மோசமாக அப்பட்டமாக ஏகபோக முதலாளிக்கு நன்மை பயக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி அமைத்து இருப்பது இந்த நாட்டில் விவசாயத்திற்கு அடுத்து அதிக அளவில் நன்மை தரும் தொழிற்சாலைகளில் பணியிலிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கும்.
ஆகவே இந்துத்துவ மோடி அரசு உடனடியாக இந்த தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டுமென்று மே17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
மே17 இயக்கம்
9884072010