லெப்.கேணல்.திலீபன் எனும் பெருவீரன்.
திலீபனின் உண்ணாநிலைப் போராட்டமென்பது தெற்காசிய அரசியலை புரட்டிப் போட்ட நிகழ்வு. இப்பிராந்தியத்தின் நாடுகளில் தங்குதடையின்றி தன்னால் இராணுவதலையீடு செய்துவிட முடியுமெனும் பேராசை இந்திய வெளியுறவு, பாதுகாப்பு வட்டங்களால் உருவாக்கப்பட்டதை நம்பிய இராஜீவ்காந்தி அரசின் எதேச்சதிகாரப் போக்கை முடிவுக்குக் கொண்டுவந்த பெரும் அரசியல் நிகழ்வே திலீபனின் போராட்டம். இந்திய அரசிற்கு எதிராக பெரும் மக்கள் திரளை இந்தியாவிற்கு வெளியே திரட்டிவிட முடியுமென்பதை இந்தியா எதிர்பார்க்கவில்லை. மேலும் தெற்காசியாவில் விரிந்து கிடந்த ஒரு இனத்தை அரசியலாக பிணைத்த முதல் நிகழ்வு எனவும் இதைச் சொல்ல முடியும். கருப்பு ஜூலை உலக தமிழினத்திற்குள் அதிர்வை ஏற்படுத்தியதெனில், திலீபனின் போராட்டம் தமிழர்களை அரசியல் ஆற்றலாக திரட்டியது. தமிழீழம் மட்டுமல்லாது தமிழ்நாடு, மலேசியா, மாலத்தீவு, மொரீசியஸ் என அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழர்களை முதன்முறையாக தமிழ்த்தேசிய அரசியலால் ஒன்றிணைக்க இயலுமென்பதை உலகிற்கு காட்டியது.
வங்கதேசத்தில் இராணுவ தலையீடு, மாலத்தீவில் இராணுவ தலையீடு, தென்னிலங்கையில் இராணுவத்தலையீடு என இந்திய இராணுவத் தலையீடுகள் தங்குதடையின்றி இருந்ததை எதிர்கொண்ட முதற்போராட்டம் ஈழத்தில் திலீபனால் வெடித்தது. இந்திய பார்ப்பனீய அதிகார வர்க்கம் வழக்கம்போல தனது மேலாதிக்க திமிரில் உதாசீனப்படுத்தியப் இப்போராட்டம், இந்தியப் படைகளை தனது சொந்தப் படைகள், தம்மைக் காக்க வந்த படைகள் எனக் கொண்டாடிய தமிழர்களை உறக்கத்திலிருந்து கலைத்தது. இந்தியப் படை என்பது ஆதிக்கப் படை, ஆக்கிரமிக்க, சிங்கள அரசிற்கு ஆதரவாகவே களமிறக்கப்பட்டது என்பதை திலீபன் தன் உண்ணாநிலையின் மூலமாக உணர்த்தியதை கண்டுணர்ந்தார்கள். தன் உடல் எவ்வாறு சிறிது, சிறிதாக சிதைக்கப்படுகிறதோ அதுபோல தமிழீழமும் சிதைக்கப்படுமென்பதை திலீபன் தன் உண்ணாநிலையின் மூலமாகக் காட்சிப்படுத்தினார். இவ்வாறான காட்சிப்படுத்தல் இதற்கு முன் எந்த ஒரு உண்ணாநிலைப் போராட்டத்திலும் நடந்ததில்லை. அனைத்தும் மக்கள் முன்பு நிகழ்த்தப்பட்டது.
எளிய கோரிக்கைகளுக்காக, நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளுக்காக, வாக்குறுதி கொடுக்கப்பட்டவற்றை நிறைவேற்று எனும் கோரிக்கைக்காக உறுதியோடு போராடினால் மரணத்தையே இந்திய அரசு பரிசாகத் தருமென்பதை திலீபன் எனும் ஒற்றைத்தமிழன் நிரூபித்துக் காட்டினான். இராணுவம் என்பது அரசியல்-அதிகார வர்க்கத்தின் ஆதிக்கக் கருவி என்பதை செயலற்று நின்று போன இந்திய இராணுவத்தினைச் சுட்டிக்காட்டினார் லெப்.கேணல்.திலீபன். மக்கள் இராணுவமே மக்களுக்காகப் போராடுமென்பதையும், அரசின் இராணுவம் ஆதிக்க நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுமெனும் அரசியல் பாடத்தை நலூர் திடலில் விடுதலைப் புலிகள் நடத்தினார்கள்.
ஒரு பேரரசின் இராணுவத்தை எதிர்த்துப் போர் புரியவேண்டி இருக்கும் எனும் அறத்தை திலீபனின் போராட்டம் மக்களுக்கு உணர்த்தியதே இப்போராட்டத்தின் மாபெரும் அரசியல்-வரலாற்று வெற்றி. இதன் பின்னர் தமிழீழ நிலம் இந்தியப் படைகளை அடித்துவிரட்டும் ஓர்மைக்குள் வந்தடைந்தது. விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டின் அறத்தை அறிந்த மக்கள் பிற போராட்ட குழுக்களிடமிருந்து விலகி புலிகளின் பின்னே அணிதிரண்டார்கள். இப்படியான மக்கள் திரட்சியை எதிர்கொள்ளும் வலிமை இந்திய அரசிற்கு மட்டுமல்ல, உலகின் எந்தப் பேரரசிற்கும் சாத்தியமில்லை என்பதை வியட்நாம் ஏற்கனவே உணர்த்தியிருந்ததை ஏற்காத வீணர்கள் தம் படையினரை தம் அதிகார வெறிக்காக பலி கொடுத்ததை உலகம் கண்டது. அதனால் தான் இந்தியாவின் அமைதிகாப்புப் படை எனும் ஆதிக்கப் போர் ‘இந்தியாவின் வியட்நாம்’ எனப்பட்டது. அவமானத்தின் உச்சிக்குச் சென்ற இந்திய பார்ப்பனீய அதிகாரவர்க்கம் சூழ்ச்சியால் மட்டுமே தமிழர்களையும், புலிகளையும் வெல்ல முடியுமென்பதை 2009 தமிழினப்படுகொலை சுட்டிக்காட்டியது. ஆனால் தமிழீழத்தில் எதிர்கொண்ட அவமானத்திற்குப் பின்னர் இந்திய பார்ப்பனீய அரசு இதன் பின்னரான கடந்த 33 வருடங்களில் ஆதிக்கத்திற்காக தனது இராணுவத்தை அனுப்பத் தலைப்படவில்லை என்பதுவும் திலீபன் ஈட்டிய பெருவெற்றியின் அடையாளம்.
மக்களை அரசியல்படுத்தாமல் போராட்டமில்லை, போராட்டமில்லாமல் சுயமரியாதையில்லை. சுயமரியாதையில்லாமல் விடுதலை என்பது உத்திரவாதமில்லை. இப்பாலபாடத்தை தம்மை அழித்து தமிழர்களுக்கு போதித்தவர் லெப்.கேணல் திலீபன் எனும் பெருங்காட்டை அழித்த நெருப்பின் துளி.
தெற்காசியாவின் மாபெரும் அரசியல்-சமூக-பொருளியல் ஆற்றல் தமிழ்ப் பேரினம்.
இதை மீண்டுமொரு முறை நினைவுபடுத்தவே இந்நாளை திலீபனின் வீரவணக்க நாளாக நினைவு கூறுவோம்.
வீரவணக்கம் லெப்.கேணல் திலீபா, சோசலிசத் தமிழீழம் மலரும். மாவீரனே! உன் புகழ்க்கொடி உயரும்.