நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்களை கைது செய்ததை கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்
மருத்துவம் பயில்வதற்கான தகுதித் தேர்வாக திணிக்கப்பட்ட நீட் (NEET) தேர்வு, ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை பாதிப்பதால், தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டு, உயிர்களை பறித்து வருகிறது. இத்தகைய மாணவர்கள் விரோத நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, கடந்த 14-09-2020 அன்று துவங்கி மக்கள் பாதை அமைப்பை சேர்ந்த 6 நிர்வாகிகள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டனர். உண்ணாவிரதத்தின் 7வது நாளான இன்று (20-09-2020), காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து உண்ணாவிரதத்தை கலைத்ததோடு, உண்ணாவிரதம் மேற்கொண்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். அரசின் வழிகாட்டுதலோடு அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினரை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாக கூறிக்கொண்டாலும், நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை ஒடுக்கும் வேலையை அதிமுக அரசு மேற்கொள்கிறது. அவ்வாறாகத் தான் மக்கள் பாதை அமைப்பினரின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கலைத்துள்ளது. இப்போராட்டத்தின் 5ம் நாளில் மே பதினேழு இயக்கம் கலந்துகொண்டு ஆதரவளித்தது. தொடர்ந்து மே பதினேழு இயக்கத் தோழர்கள் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்தாலும், அதுவே அரசின் முடிவாகவும் உள்ளதாக கூறிக்கொள்ளும் அதிமுக அரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளக் கூட முன்வரவில்லை. மாறாக காவல்துறையினர் மூலம் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர ஒவ்வொரு நாளும் முயன்று வந்துள்ளது. இறுதியாக அத்துமீறலையும் நிகழ்த்தியுள்ளது. இதில் பெண்கள் மீதும் காவல்துறையினர் அத்துமீறியதாக தெரிகிறது.
நீட் தேர்வின் மீதான அதிமுக அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்கும் காவல்துறையினர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறார்களா என்பது கேள்விக்குரியதாக உள்ளது. கைது செய்யப்பட்ட மக்கள் பாதை நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அத்துமீறிய காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மே பதினேழு இயக்கம்
9884072010