மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களான தமிழர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, இன்று (19-08-20, புதன்கிழமை) காலை 10 மணியளவில், மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் மே பதினேழு இயக்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், கேரளா அரசானது, டாடா போன்ற பெருவணிக நிறுவனங்களின் கையிலிருக்கும் தேயிலைத் தோட்டங்களை அரசுடைமையாக்க வேண்டும், உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், தொழிலாளர்களின் பழைய லைன் வீடுகளை மாற்றியமைத்து பாதுகாப்பான முறையில் குடியிருப்புகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு, தமிழகத்திற்கு வெளியே பணிபுரியும் தமிழர்களின் நலனிற்காக தனி அமைச்சகம் அமைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் இட்டனர்.
பெருந்திரளான மக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் கிட்டு ராசா, வன வேங்கை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரணியன், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட செயலாளர் சிக்கந்தர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாநிலத் தலைவர் மீதா பாண்டியன், அகில இந்திய முஸ்லீம் கட்சியின் மாவட்டத் தலைவர் தாஜுதீன், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் குமரன், திராவிடர் விடுதலை கழகத்தின் தோழர் திலிபன் செந்தில் மற்றும் எண்ணற்ற மே பதினேழு இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.