ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இந்தியா வந்த சுவையான வரலாறு.
கடந்த ஒரு சில மாதங்களாக உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் அனைவராலும் உச்சரிக்கப்பட்ட ஒரு வார்த்தை உண்டென்றால் அது ’ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ என்பதுதான். இதுதான் இந்த கொரோனா பெருந்தொற்றை தீர்க்கவல்ல மருந்து என்று இதைத்தான் உலகத்தின் பெரும்பாலான நாடுகள் பரிந்துரைக்கிறது. அதன் அடிப்படையிலேயே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பிரதமர் மோடியிடம் மிகுந்த தன்னடக்கத்துடன், பேரன்புடன், கெஞ்சி இந்த மருந்தை கேட்டார். அதற்கு 56 இன்ச் மார்புடைய பிரதமர் மோடி போனால் போகிறது என்று பெருந்தன்மையோடு அதை கொடுக்க சம்மதித்தார் என்கிற வரலாறெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதுவல்ல இப்போது நாம் பேசப்போவது இந்த ’ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எப்படி இந்தியாவிற்கு வந்தது இந்தியா எப்படி இதன் மொத்த உற்பத்தியாளராக மாறியது என்ற வரலாறைத்தான் பார்க்கபோகிறோம்.அதாவது
1799ஆம் வருடம் ஸ்ரீரங்கப்பட்டினம் மைசூர் உள்ளிட்ட இன்றைய கர்நாடகாவை ஒட்டுமொத்தமாக ஆண்டுகொண்டிருந்த திப்புசுல்தான் ஆங்கிலேயரிடம் போரிட்டு தோல்வியை தழுவினார். இந்த வெற்றியை கொண்டாட ஆங்கிலேயே அரசு பெரிய விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. அந்த விழா நடைபெற்ற ஒரு வாரத்திற்குள் ஆங்கிலேயப் படையில் இருந்த பெரும்பாலான வீரர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற புதுவித நோய் மிகக் கடுமையாக தாக்கியிருக்கிறது. இது குறித்து ஆராய்ந்த பொழுது அனைவருக்கும் மலேரியா இருப்பது தெரியவந்திருக்கிறது. ஏனென்றால் ஸ்ரீரங்கப்பட்டினம் மைசூர் பெங்களூர் போன்ற பகுதிகளில் கொசுக்கள் மிக அதிகம் அதுவே அவர்களை தாக்கி மலேரியா வந்திருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
இதற்கு என்ன செய்வது என்று ஆங்கிலேய அரசு முழித்துக் கொண்டிருந்த போது ஐரோப்பாவில் மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்து ’குயினின்’ கண்டுபிடித்தார்கள். இதனை உட்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பதை கண்டறிந்து ஆங்கிலேயப் படை வீரர்களுக்கு கொடுக்கப்பட்டது.ஆனால் நோய் சிலருக்கு குறைவதும் பலருக்கு குறையாமலும் இருந்திருக்கிறது. இது குறித்து ஆய்வு செய்த பொழுது அந்த மருந்து மிக கசப்பாக இருப்பதால் செத்தாலும் பரவாயில்லை இதை குடிக்கவேண்டாமென்று பலர் குடிக்காமல் இருந்தது தெரியவந்திருக்கிறது.
இதன்பின் வெறுமனே இந்த மருந்தை அப்படியே சாப்பிடாமல் அதனோடு ’ஜின்’ என்ற மதுபானத்தை கலந்து குடித்தால் அவ்வளவு கசப்பாக இருக்காது மருந்தின் தன்மையும் மாறாதென்று அதை கொடுத்திருக்கிறார்கள்.இது நல்ல பலனை கொடுக்கவே இது தான் “ஜின் & டோனிக்” என்று அழைக்கப்பட்டது. இது நல்ல பலனை அவர்களுக்கு தந்தது இதன் விளைவாக மற்ற பகுதிகளுக்கும் இதே ரசாயன கலவை கொண்ட ’குயினின்’ மருந்து அனைவருக்கும் அனுப்பப்பட்டது. இதை ’டானிக் வாட்டர்’ என்கிற பெயரில் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மாதாந்திர ரேஷன் பொருளில் ஒரு பகுதியாக கொடுக்கப்பட்டது.
மேலும் இது தொடர்ந்து அனைவருக்கும் கொடுக்க வேண்டுமென்ற்பதற்காக இந்த ஜின் வகை மதுபான உற்பத்தி நிலையங்கள் பெங்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்ததற்கு பிறகு இந்த தொழிற்சாலைகளை அப்படியே விட்டல் மல்லையா (அதாவது கடன் வாங்கி விட்டு தப்பி ஓடிய விஜய் மல்லையாவின் தந்தை) அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட யுனைட்டட் புரூவரீஸ் என்ற பெயரில் இன்றளவும் அது செயல்பட்டு வருகிறது.
இந்த ’டானிக் வாட்டரில்’ உள்ள ஜின் இராசாயன கலவையை எடுத்து விட்டால் கிடைப்பதுதான் ’குயினின்’ மருந்து. இந்த மருந்தின் ஒரு வகை தான் ’ஹைட்ராக்ஸி கிளோரோகுயின்’ என்று அழைக்கப்படுகிறது. இது தான் இன்றளவும் மலேரியாவைக்கான தடுப்பு மருந்தாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தான் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.