சாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்
தமிழகத்தை பீடித்து இருக்கும் கொடிய நோய் சாதி, அந்த நோயால் பாதிக்கப்படும் மனிதன் சக மனிதனை மனிதனாக நினைக்காமல், அவனை ஒடுக்கி, அடக்கி அடித்து, கொலை செய்யக்கூடத் தூண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களை சீர்செய்ய அரசும், நீதித்துறையும்,காவல்துறையும் ஒருங்கே செயல்பட வேண்டும். ஆனால் அத்தகைய பொறுப்பை சுமக்கக்கூடிய இந்த துறைகளே இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் சமூகத்தின் சாபக்கேடு.
22 வருடங்களுக்கு முன் இதே நாளில், மதுரை மேலூர் அருகே உள்ள மேலவளவு என்கிற கிராமத்தில் அம்பேத்கர் நகரை சார்ந்த மக்கள் சொல்லொணா துயரத்தில் வாடினர். மேலவளவு கிராம பஞ்சாயத்து பட்டியல் சாதியனருக்கான தனி தொகுதியாக அறிவிக்கப்பட்டு கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த திட்டமிட்டது தேர்தல் ஆணையம், இந்த தேர்தல் நடைபெறாமல் தடுத்து நிறுத்த ஆதிக்க சாதியினரால் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது. அத்தனை நெருக்கடிகளையும் மீறி, மேலவளவு முருகேசன் அவர்கள் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றார்.
ஒரு பட்டியல் சாதியை சார்ந்த நபர் எப்படி எங்களுக்கு தலைவராக வரலாமென்கிற ஆத்திரத்தோடு இருந்த ஆதிக்க சாதியினரிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மதுரை ஆட்சியாளரிடம் கோரிக்கை வைத்துவிட்டு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது, அந்த பேருந்தை மடக்கி பட்டப்பகலில் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன், துணை தலைவர் மூக்கன், ராஜா, செல்லத்துரை, சேவமூர்த்தி , பூபதி, சவுந்தரராஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர், இதில் முருகேசன் அவர்களின் தலையை மட்டும் சம்பவம் நடந்த இடத்தில இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி உள்ள கிணற்றில் வீசி எரிந்து விட்டு சென்றனர்.
இப்படி படுபாதக கொலையை பட்டப்பகலில் செய்த கும்பலில் 17பேரில் மூவர் நல்லொழுக்க அடிப்படையில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர் பாம்புக்கடியில் இறந்தார், எஞ்சியுள்ள 13 பேர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சமீப காலங்களில் தமிழக அரசின் போக்கானது சாதிய முரண்களை காத்து, தமிழக மக்களுக்கு இடையே உள்ள சாதி இறுக்கத்தை அதிகரித்து தங்களின் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறதா என்கின்ற ஐயம் எழுகிறது.
ஆகவே தமிழர்களுக்கிடையே பிளவை உண்டாக்கும் இந்த சாதி எனும் நச்சுப்பாம்பை விரட்டி அடிப்போம். தமிழர்களாக ஒன்றினைவோம் என்பதை இன்றைய நாளில் உறுதியேற்ப்போம்,
வீர வணக்கம் வீர வணக்கம் ,
சாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு
மே பதினேழு இயக்கத்தின்
வீர வணக்கம் வீர வணக்கம்
மே 17 இயக்கம்
9884072010