கொரோனா காலத்தில் அரசால் கைவிடப்பட்ட சாமானிய தொழிலாளர்கள்: பாகம் 04
முடித்திருத்தும் தொழிலாளர்கள் :-
தமிழ்நாட்டில் அன்றாடம் தினக்கூலிகள் போன்று இருக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 8லட்சம் பேரும் அவர்களை நம்பியிருக்கிற 40லட்சம் குடும்பங்களின் நிலை இந்த கொரோனா ஊடரங்கில் சொல்ல இயலா துன்பமே…
ஊரடங்கு அறிவிக்கும் முன்பே தமிழகம் முழுவதும் கொரோனா சலூன் கடைகள் மூலம் அதிகம் பரவுகிறது என்று அவர்களின் தொழில் கடுமையாக பாதிப்படைந்திருக்கிறது. கூடவே 25.03.2020அன்று போடப்பட்ட ஊரடங்கிலிருந்து இன்றுவரை அவர்கள் வருமானமின்றி மிகப்பெரிய துன்பத்தில் இருக்கிறார்கள். இதன் வெளிப்பாடு தான் தரமணியை சேர்ந்த பரணி என்ற முடித்திருத்தும் தொழிலாளியின் தற்கொலை.
ஆகவே இதுபோன்ற நிலைமை தொடரக்கூடாதென்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் உள்ள அந்தந்த பகுதி முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கங்கள் கொரோனா கால நிவாரணமாக 10,000ரூ அரசு வழங்க வேண்டுமென்று அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு அமைப்புசாரா தொழிலாளிகளுக்கென்று நிவாரண தொகை ஒதுக்கி அதில் முடித்திருத்தும் தொழிலாளர்களுகென்று நலவாரியத்தில் பதிவு செய்யபட்ட 14,667 பேருக்கு இரண்டு முறையாக பிரித்து 1000ரூ தருவதற்கு அரசாணை வெளியீட்டது.
குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் தோராயமாக 6000பேருக்கும் மேல் முடிதிருத்தும் தொழிலில் இருக்கிறார்கள். ஆனால் அரசு கணக்குப்படி 86நபர்களே பதிவு செய்துள்ளனர். மீதமிருக்கிற பேர் தங்களது பதிவை புதுபிக்கவில்லை போன்ற பல்வேறு காரணத்தை சொல்லி இரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 8லட்சம் கடைகளும் அதை நம்பி 40லட்சம் குடும்பங்களும் இருப்பதாக முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் கூறிகிறது. இதனை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிவாரணம்தர கோரிக்கை வைத்த பின்பு 16.05.2020 அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் 2000ரூ தருவதாக அரசு அரசாணை வெளியிட்டு அதனை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியது.
ஏற்கனவே மூன்று மாதம் ஆகிவிட்ட நிலையிலும், அரசு முதலில் அறிவித்த 14,667 பேரில் 75 சதவீதம் பேருக்கு நிவாரண தொகையே போய் சென்றடையாமல் இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களில் பாதிபேருக்கு கூட நிவாரணம் வராத நிலையில் முடித்திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் நேரடியாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் மெத்தன போக்கையே அதிகாரிகள் கையாளுகின்றனர். இவற்றில் பதிவுசெய்யாத தொழிலாளர்கள் தாசில்தார் அலுவலகத்தில் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்துவிட்டு பல தொழிலாளர்கள் ரூ1000க்காக காத்து கிடக்கின்றனர். இதில் சென்னையின் நிலைமையை நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை…
ஊரடங்கு தளர்வு அறிவித்த பின்பும் பல கடுமையான கட்டுப்பாடுகள் முடித்திருத்தும் கடைகளுக்கு போடப்பட்டிருப்பதால் மக்கள் வரவும், கடைகளுக்கான செலவும் அதிகரித்து இருக்கிறது. ஆகவே இதனையெல்லாம் கணக்கில் கொண்டு முடித்திருத்தும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான ரூபாய் 10,000அவர்களுக்கு நிவாரணமாக உடனடியாக கொடுக்கவேண்டும். அதுவே 40லட்சம் குடும்பங்களை காக்கும் செயலாக இருக்கும்.
மே 17 இயக்கம்
9884072010