குற்றம் நிரூபிக்கப்படாமல் ஊரறிந்த கொலைகாரர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.இது தமிழக அரசின் அப்பட்டமான தோல்வி. தமிழக அரசே! உடுமலை பேட்டை சங்கர் கொலைக்கு நீதி வழங்கு! ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், தனிநீதிமன்றமும் அமைத்திடு!.
தமிழகம் உட்பட இந்தியாவையே உலுக்கிய உடுமலைபேட்டை சங்கர் கொலைவழக்கில் திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் சங்கரை கூலிப்படை வைத்து கொலை செய்த கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6பேருக்கு தூக்கு, மீதமிருக்கிற 5பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்று 2017 டிசம்பர்13ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜீன் 22’2020 கடந்த திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்பில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 3பேரின் தூக்குதண்டனை இரத்து செய்யப்பட்டு அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டனர், அதேபோல தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஏனையோருக்கு ஆயுள்தண்டனையும், கவுசல்யாவின் தாய் உள்ளிட்டவர்கள் விடுதலையை எதிர்த்து போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் தீர்பளித்தனர்.
சாதிவெறி தலைக்கேறி பட்டப்பகலில் ஊரறிந்து வெட்டிக்கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுமைக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கருத்துதெரிவித்த கவுசல்யா தமிழக அரசின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பினார். தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தமிழகத்தில் ஆணவகொலைகளே நடக்கவில்லையென்று சொன்னார். அதை மெய்பிக்கவே தமிழக அரசு இந்தவழக்கில் மெத்தனமாக நடந்துகொண்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
இதுபோன்று இனியும் நடக்காமல் இருக்க ஆணவக்கொலைக்கு எதிராக சிறப்பு சட்டமும், ஆணவக்கொலை வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றமும் அமைக்கவேண்டும். அதுவே குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்கவும் ஆணவக்கொலைகள் நடக்காமல் இருக்கவும் வழி.
அதேபோல இந்த வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கவுசல்யாவையும் ஒரு தரப்பாக சேர்க்கவேண்டும். அப்போது தான் வழக்கு நம்பகத்தன்மையோடு நடைபெறும்.
சாதிய வன்முறையாளர்களை அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது நேற்று மேலவளவு முருகேசன் கொலையாளிகள், இன்று சங்கர் கொலையாளிகள்.அதேபோல காவல்துறையையும் சாதிரீதியாக பயன்படுத்தி சாதி வன்மத்தை வளர்த்தெடுக்கிறது என்பதை பல நிகழ்வுகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. முற்போக்கு தோழமைகள் இந்த அநீதிக்கு எதிரான உறுதியான ஆற்றலாக ஒன்றிணைந்து வீரியமாக செயலாற்றவேண்டிஅய பொறுப்புள்ளது.
சாதிய வன்மங்கள், சாதியை பாதுகாக்கும் நிறுவனங்கள், சாதிவெறியை பாதுகாக்கும் அரசுகள் ஆகியவற்றுக்கு எதிராக ஒன்றிணைவோம்.
மே 17 இயக்கம்
9884072010