அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

அரசுப்பணிகளில் புதிய பணியிடங்கள் உருவாக்க தமிழ் நாடு அரசு தடைவிதித்திருப்பதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினால் அரசிற்கு ஏற்பட்டுள்ள செலவினங்களை ஈடு செய்யும் விதமாக, அரசு நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் நாடு அரசு திட்டமிட்டு, அதன்படி பல்வேறு அறிவிப்புகளோடு தமிழ் நாடு அரசுப் பணிகளில் புதிய பணியிடங்களை உருவாக்கவும் தடைவிதித்துள்ளது. அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது வரவேற்கக்கூடியது என்றாலும், அரசுப்பணிகளில் புதிய பணியிடங்களை உருவாக்க தடைவிதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை முழுவதும் நிரப்பப்படாததால், அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமையும், அலுவலங்களில் பணித்தொய்வும் ஏற்பட்டுள்ளது. இது அரசுப் பணியாளர்களை மட்டுமல்ல, மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்நிலையில் புதிய பணியிடங்கள் உருவாக்கக் கூடாது என்று அறிவித்திருப்பதன் மூலம் பணிச்சுமையும், பணித்தொய்வும் மேலும் அதிகரிக்கவே செய்யும். இதனால் மக்கள் கடும் துயரத்துக்குள்ளாவார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்களின் முடங்கியிருக்க, மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அரச நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அரசு அலுவலகங்கள் சில மாதங்களாக முழுமையாக செயல்படாத நிலையில், அதிகளவில் பணிகள் தேங்கியுள்ளன. கொரோனா பேரிடர் காலம் முழுவதும் இது தொடரும் பட்சத்தில் கோப்புகள் ஆண்டுக்கணக்கில் தேங்கும் நிலை ஏற்படும். இதனை சமாளிக்க புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

போதிய பணியிடங்களை உருவாக்காமல் போனால், அவை பெருநிறுவனங்களை சேர்ந்த ஒப்பந்த பணியாளர்களை கொண்டு நிரப்பப்படுமோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. அந்நிலை ஏற்பட்டால், ஒன்றிய அரசு விரும்பும், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாத பெருநிறுவனங்களை தமிழக அரசுப் பணிகளில் திணிக்கும் திட்டமாக கூட இருக்கலாம். ஒன்றிய அரசு அனைத்து பொதுத்துறைகளையும் தனியார்மயாக்கப்படும் என்று கூறியுள்ள பின்னணியில் வந்துள்ள இந்த அறிவிப்பு நமது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

அதேவேளை, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் நிலையில், இந்திய மாநிலங்களிலேயே உச்சபட்சமாக தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பின்மை விழுக்காடு 50% என இருக்கும் நிலையில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டப்படிப்பை முடித்து வெளிவர இருக்கும் நிலையில், கொரோனாவினால் வேலையிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாமல் சென்றால், வேலைவாய்ப்பற்று இருப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அவை பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டை முடக்கவே செய்யும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய அரசே, வேலைவாய்ப்பை தடுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்களை துயரத்திற்குள்ளாக்கும் இது போன்ற செயல்பாடுகளை தமிழ் நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஒன்றிய அரசிடமிருந்து வர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை, பேரிடர் கால நிவாரணத் தொகை, பல்வேறு திட்டங்களுக்கான நிதி உள்ளிட்ட அனைத்து நிலுவைத் தொகைகளையும் தமிழ் நாடு அரசு பெற பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவை பெறப்படும் பட்சத்தில் புதிய பணியிடங்கள் மூலம் உருவாகும் செலவினங்களை சந்திப்பதில் சிக்கல் இருக்காது.

எனவே தமிழ்நாடு அரசு, புதிய பணியிடங்களை உருவாக்கக்கூடாது என்று வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு,புதிய பணியிடங்களை உருவாக்கி மக்கள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும். ஒன்றிய அரசின் போக்கிற்கு தமிழ் நாடு அரசு செல்வதை கைவிட்டுவிட்டு, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக போராடிப் பெற வேண்டும் என்றும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.


மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply