தமிழக அரசே, ஈரான் நாட்டிற்கு கூலி வேலைக்கு சென்ற மீனவர்களை மீட்டிடு! – மே பதினேழு இயக்கம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், ஈரான் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த 562 மீனவர்கள் உட்பட தமிழ் நாட்டை சேர்ந்த 750 மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாமல், கடந்த மூன்று மாதங்களாக அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். மூன்று மாதம் முன்னரே இந்திய அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டும் அவர்களை மீட்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், 06-03-20 அன்று தமிழ் நாட்டு முதலமைச்சரை சந்தித்து மீனவர்களை மீட்க அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து மீனவர்களை மீட்க கப்பல் அனுப்பப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் அளித்தது. ஆனால், ஒவ்வொருவரும் பயணக்கட்டணமாக ரூ.7,600 கட்ட வேண்டும் என்று இந்திய அரசு தெரிவித்தது. அது மட்டுமல்லாமல், விசா ரத்துக்கான செலவையும், கப்பல் புறப்படும் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு வருவதற்கான செலவையும் மீனவர்களே ஏற்க வேண்டும் தெரிவித்தது. இதனால் ஒரு மீனவர் குறைந்தபட்சம் ரூ.10,000 செலவு செய்தால் மட்டுமே தாயகம் திரும்ப முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
ஈரான் நாட்டிற்கு பெருநிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்களை போல் இவர்களுக்கு மாதச்சம்பளம் கிடையாது. மீனவர்கள் தினக்கூலியாக வேலைக்கு சென்றவர்கள். தினக்கூலிகள் என்பதினாலேயே, ஒரு வேலை உணவை மட்டுமே உட்கொண்டு, மீன்பிடி படகிலேயே தங்கியுள்ளனர். ஆகையால் மற்ற நிறுவன வேளைகளில் இருப்பவர்கள் போல் செலவு செய்து தாயகம் திரும்புவது சாத்தியமில்லாதது. இச்சூழலை அறிந்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
வந்தே பாரத் என்னும் திட்டத்தின் கீழ், சிறப்பு விமானங்களை அனுப்பி அமெரிக்கா, UAE, குவைத், ஏமன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான பணக்கார இந்தியர்களை மீட்டு வரும் இந்திய அரசு, இந்தியாவிற்குள் வேலைக்காக புலம்பெயர்ந்த ஏழை மக்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடக்கவிட்டது போல், ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழ் நாட்டு மீனவர்களையும் கைவிட்டுவிட்டது.
கூலிக்கு வேலைக்கு சென்றவர்களை மீட்பதற்காக பணம் கேட்ட இந்திய அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மீனவர்களின் குடும்பத்தினர் கோரியது போல், அவர்களை மீட்க தமிழ் நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அவர்களது செலவுகளை தமிழ் நாடு அரசே ஏற்றுக்கொண்டு, இந்திய கப்பல் மூலம் அவர்களை மீட்க வேண்டுமென தமிழக அரசிடம் மே பதினேழு இயக்கம் கோரிக்கைவிடுக்கிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010