புதிய கல்விக் கொள்கையை இந்த கல்வி ஆண்டிலிருந்தே அமல்படுத்தப் போவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மோடி அரசே! போராட்டத்தைத் தூண்டாதே! – மே பதினேழு இயக்கம்
தமிழர்களும், இந்தியா முழுதிலுமுள்ள கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையினை கொரோனா ஊரடங்கினைப் பயன்படுத்தி எதிர்ப்பில்லாமல் நடைமுறைப்படுத்திட மோடி அரசு முயன்று வருகிறது. மக்கள் ஒரு பேரிடரில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, இதுநாள் வரை மக்கள் எதிர்த்துவந்த கொள்கைகளை திணிக்க முயலும் அரசின் செயல் மிகவும் இழிவானது. கொரோனாவை எதிர்கொள்ள முறையான நிதியைக் கூட ஒதுக்காமல், எந்த முன்னெடுப்பையும் செய்ய முடியாத இந்த மோடி அரசு, கல்வியை காசாக்கும் மக்கள் விரோத கொள்கையை திணிப்பதில் மட்டும் அபார வேகம் காட்டி வருகிறது.
புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது இந்தியாவின் தேசிய இனங்களின் மீது திணிக்கப்படும் வன்முறையாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த கல்விக் கொள்கை என்பது பயணிக்கக் கூடாத ஒரு ஓட்டை படகினைப் போன்றது. அந்த படகிற்குள் ஏற்றி நம் குழந்தைகளை ஆற்றில் பயணிக்கச் செய்ய பார்க்கிறது மோடி அரசு. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பதற்காக நாம் குரலெழுப்பியே ஆக வேண்டிய தருணம்.
கல்விக் கொள்ளைக்கு எதிராகவும், தேசிய இனங்களின் மாநில உரிமைகளை பாதுகாத்திடவும் இந்த கல்விக் கொள்கையை எதிர்த்து நாம் நடத்த வேண்டிய போராட்டங்கள் தான் இரண்டாவது விடுதலைப் போராட்டமாகும். தமிழ்நாடு அரசுக்கு மோடி அரசினை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் துணிவில்லை என்றால் பதவியிலிருந்து வெளியேற வேண்டும்.
எந்த நிலையிலும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்று தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்க வேண்டும். நீட் தேர்வில் ஏமாற்றியது போல் இனிமேலும் மக்களை ஏமாற்ற முயலக் கூடாது. இவை எல்லாவற்றையும் மீறி அடக்குமுறையின் வாயிலாக புதிய தேசிய கல்விக் கொள்கையை திணிக்க நினைத்தால் தமிழ்நாடு மிகப் பெரிய போராட்டத்திற்கு அணியமாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும்?
————————————————————————————————–
1. புதிய கல்விக் கொள்கை குலக்கல்வி முறையை மீண்டும் திணித்து BC, MBC, SC.ST மற்றும் ஏழை மாணவர்களின் கல்வி உரிமையினை கேள்விக்குள்ளாக்குகிறது.
2. கலை, அறிவியல், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்து கல்லூரி படிப்பிற்கும் நீட் மாதிரியான அகில இந்திய நுழைவுத் தேர்வைத் திணித்து நமது மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் வாய்ப்பை பறிக்கிறது.
3. 8ம் வகுப்பிற்கு பிறகிலிருந்தே தொழிற்கல்வி பெறும் நிலையினை உருவாக்கி, குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதை ஊக்குவிக்கிறது. அறிவியல், தொழில்நுட்ப மற்றும் இதர படிப்புகளுக்கு ஏழை மாணவர்களுக்கு இருக்கும் வாய்ப்பை பறிக்கிறது.
4. மூன்று, ஐந்து மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கூட பொதுத்தேர்வு வைத்து, ஏழை மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநிற்றல் அதிகமாகச் செய்கிறது.
5. சர்வதேச மற்றும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களை கல்வித் துறையில் நுழைத்து கல்வியை லாபப் பொருளாக்கி ஏழை மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பை மறுக்கிறது.
6. இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கிறது.
7. எல்லாவற்றுக்கும் மேலாக மாநில அரசுகளின் கல்வி அதிகாரத்தைப் பறிக்கிறது.
8. வெவ்வேறு பண்பாடு, கலாச்சாரம், மொழி, பொருளாதார நிலை கொண்ட தேசிய இனங்களின் கூட்டமைப்பில் ஒற்றைக் கல்வி முறை என்ற அயோக்கியத்தனத்தை திணித்து இந்திய அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி அம்சத்தினை கேலிப் பொருளாக்குகிறது. அர்த்தமில்லாத இயந்திரங்களாக குழந்தைகளை உருவாக்குவதையே இக்கல்வி முறை செய்கிறது.
————————————————————————————–
புதிய கல்விக் கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்தப் போகிறோம் எனும் ஆணவப் பேச்சுக்கு மத்திய அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை உடனடியாக பகிரங்கமாக அறிவித்து, மோடி அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தினை தமிழ்நாடு அரசு துவங்க வேண்டும்.
படிப்படியாக நுழைவுத்தேர்வுகள், பொதுத்தேர்வுகள் போன்றவற்றைக் கொண்டு வருவதன் மூலம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி தமிழ்நாட்டின் அதிமுக அரசு மோடி அரசுக்கு சேவகம் செய்ய நினைத்தால், வரும் காலங்களில் அதிமுக அரசு அடியோடு தூக்கியெறிப்படும் என்ற நிலையை மக்கள் அதிமுக-விற்கு உணர்த்த வேண்டும்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெறு!
– மே பதினேழு இயக்கம்
9884072010