’ஒடுக்கும் தேசிய மனநிலை’யோடு நீங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் பட்சத்தில் அதைக் கருணையின்றி எதிர்கொள்ள வேண்டிவரும்

நாய்களுக்கான பெயர் வைப்பது என்பது எதேச்சையாக நடப்பதோ, அறியாமையில் நடப்பதோ அல்ல. அதுவும் ஒரு திரைப்படத்தில் பெயர் வைப்பதென்றால் போகிற போக்கில் யாரும் வைத்துவிட்டுப் போவதில்லை.

திரைப்படங்களில் கதாநாயகனுக்கான பெயர் மட்டுமே முக்கியத்துவம் பெறுவதில்லை. அப்படத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் ’பெயர்’ பெருவதற்குப் பின்னால் ஒரு ’சிந்தனை’ உண்டு. அச்சிந்தனையின் வெளிப்பாடே அப்பெயர் காரணம்.

பொழுது போக்காக ஒரு தேசத்தலைவன் பெயரை, புரட்சியாளன் பெயரை ஒரு திரைப்படத்தில் ஏதேனும் ஒரு கதாப்பாத்திரத்திற்கு யாரும் வைத்துவிடுவதில்லை. அப்படியாக செய்யப்படும் ஒரு படைப்பு, ஆக்கப்பூர்வமானதாகவோ, மக்கள் நேயமிக்கதாகவோ எவரும் கருதிவிட முடியாது.

சகதேசிய இனத்தின் மாபெரும் தலைவன் பெயரை ’சாமானியமாக’ கடந்து செல்லும் மனநிலை ஆரோக்கிய மனநிலை அல்ல. ஒரு விடுதலைப் போராட்ட தலைவனை, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை, சாதி சனதானத்தை உடைத்த சீர்திருத்தவாதியை, பெண்விடுதலையை சாத்தியப்படுத்திய களத்தோழனை கண்டறியா, கேட்டறியா, போற்ற விரும்பாத கலைஞன் படைப்பாளியே அல்ல. அவ்வாறான நோய்க்கூறு மனநிலை கொண்டவர்களை எந்தச் சமூகமும் சகித்துக் கொள்ளாது.

சாதிய ரீதியான இழிவும், இனரீதியான இழிவும் எதேச்சதிகார மனநிலையின் வெளிப்பாடு. இந்த எதேச்சதிகாரத்தை எதிர்த்தே எம் இனம் போராடி வருகிறது. அந்நிலை எங்கிருந்து எழுந்தாலும் எம் எதிர்ப்பு கூர்மையாகவே வெளிப்படும். இந்துத்துவ அரசியலை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்கள் ஒன்றிணைவை சீர்குலைக்கும் எவ்வித படைப்பும் பாசிச மனநிலை கொண்டதாகவே பார்க்கப்படும்.

சனநாயகமற்ற மனநிலை கொண்டவர்களின் படைப்புகள் ‘சங்கி’ மனநிலைக்குச் சமம் அல்லது குப்பைகளுக்குச் சமம்.

உங்கள் படைப்பில் வரும் நாய்க்கு அரசியலாக பெயர் வைக்க விரும்பினால், ’ஒன்றரை லட்சம் தமிழர்களை.இனப்படுகொலை’ செய்யத் துணை போன அதிகாரிகள் பலர் உங்கள் மாநிலத்தை, உங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை வைத்து நீங்கள் அழகு பார்க்கலாம்.

ஒடுக்கப்படும் தேசிய இனமாக உங்கள் குரல் இருக்குமெனில் அதை சக ஒடுக்கப்படும் தேசிய இனமாக நாங்கள் ஆதரித்து நிற்போம். ஆனால் ’ஒடுக்கும் தேசிய மனநிலை’யோடு நீங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் பட்சத்தில் அதைக் கருணையின்றி எதிர்கொள்ள வேண்டிவரும். ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில், அரசியலாக ஒவ்வொருவரும் எங்கு நிற்கிறார்கள் என்பதே அளவுகோல்.

திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
மே பதினேழு இயக்கம்

Leave a Reply