தமிழக அரசே! கோவையில் நடக்கும் அநீதிகளை வெளிக்கொண்டு வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிக்கையின் உரிமையாளரை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதமானது. உடனடியாக அவரை விடுதலை செய்- மே 17 இயக்கம்.
கோவையில் நடக்கும் பல்வேறு அநீதிகளையும் அக்கிரமங்களையும், அரசின் ஊழல்களையும் மக்களுக்கு ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வந்த ‘சிம்பிளிசிட்டி’ பத்திரிகையை முடக்குவதற்காக தமிழக அரசு திட்டமிட்டு அதன் உரிமையாளரை கைது சிறையில் அடைத்தும், அதன் ஒளிப்பதிவாளரை கைது செய்து சுமார் 10மணிநேரம் அலைகழித்து பின்னர் விடுவித்திருக்கிறது.
சமீபத்தில் கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் தமிழக அரசு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்பதை வெளிக்கொண்டு வந்ததும், நிவாரணப் பொருள்களை வினியோகிக்கின்றோம் என்கிற பெயரில் நியாயவிலை கடைகளில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தியது என தொடர்ச்சியாக கோயமுத்தூரில் நடக்கும் பல்வேறு ஊழல்களை வெளிக்கொண்டு வந்த பத்திரிகைதான் சிம்பிளிசிட்டி.
இந்த பத்திரிக்கையை முடக்கும் விதமாக தற்போது அதன் உரிமையாளர் திரு.ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அதுபோக பத்திரிக்கையில் வேலை செய்யும் பத்திரிக்கையாளர்கள் இரண்டு பேரை 10 மணி நேரத்திற்கும் மேலாக எங்கு வைத்திருக்கிறோம் என்று யாருக்கும் தகவல் சொல்லாமல் கோவை காவல்துறை அலைக்கழித்து பின் விடுவித்திருக்கிறார்கள்.
அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் போக்கு என்பது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது ஜனநாயக விரோதமானதும் கூட.. ஆகவே இதனை மே 17 இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.
பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற ‘சிம்ப்ளிசிட்டி’ பத்திரிக்கையின் உரிமையாளர் திரு. ஆண்ட்ரூ சாம் ராஜா பாண்டியன் அவர்களை உடனடியாக விடுதலை செய்க.
மே 17 இயக்கம்
9884072010