தமிழக அரசுக்கு சொந்தமான ‘பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கிட்டுகளை’ மத்திய அரசு பிடித்து வைத்து இருப்பது கண்டனத்திற்குரியது – மே17 இயக்கம்.
இன்று தமிழகத்தில் கொரனோ தொற்று நிலவரம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அவர்கள் பேட்டி அளித்தார். அந்த சந்திப்பின்போது ஒரு பத்திரிக்கையாளர் நேற்று 50,000 ‘பாதுகாப்பு கவசங்கள் மற்றும் சோதனை கிட்டுகள்’ தமிழகத்திற்கு வரும் என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சொல்லியிருந்தார். அவை வந்துவிட்டதா என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.
அந்த கேள்விக்கு பதில் சொன்ன தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் அந்த பாதுகாப்பு கவசங்கள் வந்துவிட்டது. மத்திய அரசிடம் இருக்கிறது மத்திய அரசு அவற்றை பிரித்துக் கொடுக்கும் என்று ஒரு பதிலை சொல்லி இருக்கிறார்.
அந்த பாதுகாப்பு கவசங்கள் மற்றும் சோதனை கிட்டுகளை ஆர்டர் செய்தது தமிழக அரசு. நியாயப்படி பார்த்தால் மத்திய அரசுதான் மாநிலங்களுக்கு அவற்றை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அது செய்ய தவறிய பட்சத்தில் மாநில அரசே ஆர்டர் செய்திருக்கிறது. அதையும் மத்திய அரசு தடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.
சீனா ரஷ்யா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை அனுப்பும் பொழுது அதை வழியிலேயே அமெரிக்க கப்பல் படை கொள்ளை அடிப்பதற்கும் மத்திய அரசு இப்போது செய்து இருப்பதற்கும் ஏதேனும் வேறுபாடு இருக்கிறதா?
நியாயப்படி தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய எந்த நிதியையும் இதுவரை மத்திய அரசு கொடுக்கவில்லை. மேலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் நோயின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மத்திய அரசு பாதுகாப்பு கவசங்களையும் சோதனை கிட்டுகளையும் பிடித்து வைத்திருப்பது தமிழர்களின் மீதான பாஜக அரசின் வன்மத்தை காட்டுகிறது.
ஆகவே சூழ்நிலையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு மத்திய அரசு தனது வன்மத்தை விளக்கிவிட்டு தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பிடித்து வைத்திருக்கிற பாதுகாப்பு கவசங்களையும், சோதனை கிட்டுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று மே 17 இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
மே 17 இயக்கம்
9884072010