கொரோனாவை மத ரீதியான பிரச்சினையாக மாற்றுவதைக் கண்டித்த தோழர் சுப.உதயகுமார் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதைக் கண்டிக்கிறோம்! – மே பதினேழு இயக்கம்
டெல்லியில் மார்ச் 13 அன்று துவங்கி நடைபெற்ற இசுலாமிய மதம் சார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு கொரோனா பரவியிருப்பது ஒரு விபத்தாகும். பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாக பார்க்காமல், குற்றவாளிகளாக மாற்றும் விஷமத்தனமான பிரச்சாரம் இந்துத்துவ மதவாத கூட்டத்தினால் சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பாக விளக்கமளித்தவர்களும் தங்கள் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணராமல், இப்பிரச்சாரம் வலுப்பெறும் வகையிலேயே பல்வேறு தகவல்களை ஊடகங்களில் வெளிப்படையாக பேசிவந்ததை பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமார் தன் முகநூல் பக்கத்தில் விமர்சித்ததற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மதக் கலவரத்தை உண்டாக்க நினைத்த மதவாத கூட்டத்தின் மீது வழக்கு பதிவதை விட்டு, மதத்துவேசம் கூடாது என எடுத்துரைத்த தோழர் உதயகுமார் மீது வழக்கு பதியப்பட்டிருப்பது மோசமான அணுகுமுறையாகும்.
சமூக விலகலை முறையாக கடைபிடித்து, தனது வீட்டிலேயே ஒருநாள் உண்ணாவிரதத்தினை கடைபிடித்து, அதை பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்ததற்காவும் தோழர் உதயகுமார் மீது மற்றொரு வழக்கு போடப்பட்டுள்ளது. நாடு முழுதும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்களுக்கு முறையான உணவு மற்றும் பாதுகாப்பு கோரியும், கொரோனா தொடர்பாக அரசின் உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வலியுறுத்தியும் தான் இந்த உண்ணாவிரதத்தை தன் வீட்டில் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை காரணம் காட்டி சமூகத்தின் ஜனநாயக குரலை நசுக்கிட தமிழக அரசு முயலக் கூடாது என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மேலும் பாதிக்கப்பட்ட எவரின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களும் பொதுவெளியில் அறிவிக்கப்படாத நிலையில், இசுலாமியர்களின் தனிப்பட்ட விவரங்கள் மட்டும் வெளியாவது என்ன வகையான அணுகுமுறை என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட மோசமான தவறுகள் நிகழாமல் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம். பேரிடர் காலத்தில் மதத்துவேசம் ஏற்படுத்தும் வகையிலும், தனிநபர் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும், இத்தகைய தனிப்பட்ட விவரங்கள் வெளிவருவதற்கு காரணமான அதிகாரிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
தோழர் சுப.உதயகுமார் அவர்கள் மீதான வழக்கினை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
– மே பதினேழு இயக்கம்
9884072010