எடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும், பெட்ரோகெமிக்கல் ரத்து அறிவிப்பும் தேர்தலுக்கான முன்னோட்டமே தவிர அனைத்தும் பொய்
கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்றும், இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் நாகை மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதி அளித்த சுமார் 50,000கோடி மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்திற்கான உரிமையை ரத்து செய்வதாகவும் தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது.எடப்பாடி அரசு உண்மையிலேயே மக்களின் மீதும், மண்ணின் மீதும் அக்கறை கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்றால் நாமும் பாராட்டி இருக்கலாம். ஆனால் உண்மை வேறு.
அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் எதுவும் இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு காரணமாக பாதிக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இதன்மூலம் ஏற்கனவே 600க்கு மேல் அனுமதி இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற ஓஎன்ஜிசி நிறுவன எண்ணெய் கிணறுகளாகட்டும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு எண்ணெய் கிணறுகளாகட்டும், அதுபோக சமீபத்தில்தான் வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு இடங்களில் கிணறுகளை தோண்டுவதற்கான அனுமதி கொடுத்து விட்டார்கள். மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட மக்களிடம், மாநில அரசிடம் அனுமதி தேவையில்லை என்று சட்டத்திருத்தத்தையும் செய்துவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு என்பது வெற்று காகிதமே.
அதேபோல பெட்ரோகெமிக்கல் அரசாணை ரத்து என்பது அதைவிட பெரிய பித்தலாட்டம். அதாவது 2008 ஆம் ஆண்டு கடலூர் நாகை ஆகிய மாவட்டங்களில் நாகர்ஜுனா குழுமத்தின் (NOCL) சார்பில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் தொடங்க 02.07.2008 அடிக்கல் நாட்டப்பட்டது. அந்ததிட்டம் தொடங்குவதற்கான தமிழக அரசின் அரசாணை 17.7.2017 அன்று வெளியிடப்பட்டது.
ஆனால் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட தானே புயல் போன்ற பல்வேறு கால சூழ்நிலையால் 2000ஏக்கரிலான அதன் கட்டுமானம் 70% தொடங்க படாமலேயே இருந்தது. இதனால் அந்த நிறுவனம் சுமார் 8800 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டு இறுதியில் 2018ல் அந்நிறுவனம் திவாலாகி விட்டதென்று மத்திய அரசின் திவால் சட்ட ஆணையம் அறிவித்துவிட்டது. இப்படி திவாலாகி விட்ட நிறுவனத்தை தான் ஏதோ மக்கள் நலன் கருதி எடப்பாடி அரசு வலுகட்டாயமாக இரத்து செய்துவிட்டதை போன்ற ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்படுகிறது.
அதைவிட பெரிய பித்தலாட்டம் அந்த திவாலான நிறுவனத்தை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சேட்டர்ஜி குழுமம் வாங்கி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தை தொடங்கபோகிறார்கள். இதை அந்த நிறுவனமமே இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருக்கிறார்கள்.https://www.business-standard.com/…/tcg-in-talks-with-globa… அதுதான் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்து விட்டார்களே பின்னர் எப்படி பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தை சேட்டர்ஜி குழுமம் செயல்படுத்து மென்று நீங்கள் நினைக்கலாம்.அதில் தான் எடப்பாடி அரசின் சூழ்ச்சியை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டத்திற்கு எந்த பிரச்சனையில்லை என்று சொல்லியிருக்கிறார்களே. ஆக நாகர்ஜீனா குழுமம் ஏற்கனவே பெட்ரோ கெமிக்கலுக்கு அனுமதி வாங்கி இருக்கிறார்கள்.அதனை இப்போது சேட்டர்ஜி குழுமம் வாங்குகிறது. ஆகவே இதற்கென்று தனி அனுமதி தேவையில்லை. எனவே எப்போதும் போல இனியும் கடலூர், நாகப்பட்டினம் பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் தங்கு தடையின்றி இயங்கும்.
ஆக, தமிழக எடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பும், பெட்ரோ கெமிக்கல் அனுமதி இரத்து அறிவிப்பும் தேர்தலுக்கான நாடகமே ஒழிய,இதனால் ஒரு பயனுமும் இல்லை. இதனை நம்பி நாம் நம் மண்ணுக்கான போராட்டத்தை நிறுத்தவேண்டாம்.
மே 17 இயக்கம்
9884072010