மதுரையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடைபெற இருந்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

இன்று 1-2-2020 மதுரையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பில் நடைபெற இருந்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.

இதனால் இன்று மாலை நடைபெற இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வன்முறையை தூண்டி கலவரத்தை உருவாக்கும் விதமாக பேசி வரும் பாஜக, இந்து முன்னணி கூட்டத்திற்கெல்லாம் அனுமதி கொடுத்து அவர்களை வளர்த்து விடும் தமிழக எடப்பாடி அரசு, மொழிப்போர் தியாகிகள் பற்றியும், முத்துக்குமாரை பற்றியும் மக்களிடம் பேசுவதைத் தடுக்கிறது. தமிழீழ இனப்படுகொலையை தடுத்து நிறுத்த சொல்லி உயிர் நீத்த முத்துக்குமாரின் பெயரில் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய ஜெயலலிதாவிற்கு எதிராக எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. தமிழீழ இனப்படுகொலையை பற்றி மக்களிடம் பேசுவதை தடுக்கும் எடப்பாடி அரசு தமிழர் விரோத அரசு என்று சொல்வதில் என்ன தவறிருக்க முடியும்!

ஜனநாயகத்தை மறுக்கும் தமிழக அரசின் அத்துமீறல்களை சட்டப்போராட்டத்தின் மூலம் மே பதினேழு இயக்கம் எதிர்கொள்ளும்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply