சென்னை சத்தியவாணி முத்து நகர் உழைக்கும் மக்களின் குடிசைகளை அகற்றுவதை எதிர்த்து கேள்வி எழுப்பிய தோழர் இசையரசு அவர்களை தாக்கிய காவல்துறையின் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – மே பதினேழு இயக்கம்
சென்னை சத்தியவாணி முத்து நகர் பகுதியின் குடிசை வாழ் உழைக்கும் மக்களை தமிழக அரசு வெளியேற்றி வருகிறது. சென்னை மாநகரை உழைத்து உருவாக்கிய இந்த மக்களை சிங்கார சென்னைக்குள் வாழத் தகுதியற்றவர்களாக்கி, மாநகருக்கு வெளியே பெரும்பாக்கத்திற்கும், கண்ணகி நகருக்கும் அள்ளி வீசுகிறது தமிழ்நாடு அரசு. சென்னை முழுதும் உள்ள உழைக்கும் மக்களை எல்லாம் சென்னையை விட்டு வெளியேற்றி விட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும் சென்னையை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது அரசு.
இதனை எதிர்த்து குரலெழுப்புவதற்காக அப்பகுதியில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த தோழர் இசையரசு அம்பேத்கர் அவர்களை காவல்துறை தரதரவென அநாகரீகமான முறையில் இழுத்துச் சென்று, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். உழைக்கும் மக்களுக்காகவும், சென்னையின் குடிசைகளுக்காகவும் யார் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கும் இதே நிலைதான் என்பதைப் போன்ற மிரட்டலை இதன் மூலம் விடுத்திருக்கிறார்கள்.
கவல்துறையின் இந்த அராஜக செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும். சென்னையின் உழைக்கும் மக்கள் வெளியேற்றப்படுவதைத் தடுத்து நிறுத்த அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். தோழர் இசையரசுவை தாக்கிய காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
உழைக்கும் மக்களுக்கு எதிரான தமிழக அரசின் அராஜகப் போக்கினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010