உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மீண்டும் இந்தியை திணிக்க மறைமுகமாக முயற்சிப்பதற்கு மே பதினேழு இயக்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மீண்டும் இந்தியை திணிக்க மறைமுகமாக முயற்சிப்பதற்கு மே பதினேழு இயக்கம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படும் என்று கடந்த டிசம்பர் 2 அன்று தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்ததும், பின்னர் எழுந்த கடும் எதிர்ப்பிற்கு பின்னர் இந்திக்கு பதிலாக தெலுங்கு மொழி கற்பிக்கப்படும் என்று உள்நோக்கத்தோடு அறிவித்ததும் நாம் அறிந்தததே.

இந்நிலையில், மே பதினேழு இயக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, கடந்த டிசம்பர் 2 அன்று ஒரு நிகழ்விற்காக மாணவர்கள் அழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு எந்த ஒரு தகவலும் தரப்படாமல் அந்நிகழ்வில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு தமிழகத்தை எவ்வாறு அதிர்ச்சிக்குள்ளாக்கியதோ, அதே போன்று உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மாணவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.

இதனிடையே, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் விஜயராகவன் இரண்டு நாட்களுக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, இந்தி பயிலவிடாமல் செய்து மாணவர்கள் நலனுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் செயல்படுவதாக சில மாணவர்களை வைத்தே பேசினார். நமக்கு கிடைத்த தகவல்களின்படி, அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கவில்லை. மாறாக, வெளியிலிருந்து மாணவர்களை அழைத்து வந்து இந்தி மொழிக்கு ஆதரவான ஒரு தோற்றத்தை அளிக்க முயற்சித்தார்.

இன்று, மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கைப்பாவையாக செயல்படும் எடப்பாடி அரசு அழுத்தத்தின் பெயரில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அம்மாணவர்கள் இந்தி பயில விரும்புவதாக அவர்களை வற்புறுத்தி தனித்தனியாக கடிதம் பெற்று வருகின்றார் அந்நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன். இதன் மூலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மீண்டும் இந்தியை பயிற்றுவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மட்டுமல்ல, தமிழ் தவிர எந்த ஒரு மொழியும் பயிற்றுவிக்கப்படக் கூடாது என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடாக இருக்கும் போது, குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் தெலுங்கு மொழி பயிற்றுவிக்கப்படும் என்று அறிவித்துவிட்டு, குழப்பத்தை பயன்படுத்தி மீண்டும் இந்தியை கொண்டுவர மத்திய பாஜக அரசின் விருப்பத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வதாக அறியமுடிகிறது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் ஆகியோரது இந்த முயற்சியினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இந்தியை திணிக்க முயலும் மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்க்க வேண்டிய தமிழக அரசு, பதவியை காப்பாற்றிக்கொள்ள தமிழகத்தின் நலனை விட்டுக்கொடுப்பது என்பது தமிழக மக்களுக்கு அதிமுக அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம். அதிலும் தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஊடாக இந்தியை திணிப்பது என்பது, நம் விரலை வைத்து நம் கண்ணையே குத்துவது போன்றது.

தமிழகத்தில் இந்தி எந்த ரூபத்தில் திணிக்கப்பட்டாலும் அதனை எதிர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அதிலும் குறிப்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் மொழி தவிர எந்த ஒரு மொழியையும் பயிற்றுவிக்கப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படுத்த ஆவணம் செய்ய வேண்டும்.

தமிழ் மொழி வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் இந்தியை வளர்க்க நினைக்கும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித் துறையிலிருந்து உடனடியாக பதவி விலக வேண்டும். அதேபோன்று, தமிழ் மொழி வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாமல் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தி மொழியை வளர்க்க கடும் பிரயத்தனம் மேற்கொள்ளும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் விஜயராகவன் அந்த பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்பதால் அவர் அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். மேலும், இந்தி பயிற்றுவிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தி கடிதம் பெறுவதை உடனடியாக தடுக்க வேண்டும்.

தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழக அரசு செயல்படுமானால், அனைத்து ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து மக்களை ஒன்றுதிரட்டி இதற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை ஒருங்கிணைக்க மே பதினேழு இயக்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply