விரிவான பிராந்திய பொருளாதார உடன்பாட்டு ஒப்பந்தம் (RCEP) தமிழர் நலனுக்கும் தமிழரின் வணிகத்திற்கும் எதிரானது என்பதை விளக்கும் விதமாகவும், இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட கூடாது என வலியுறுத்தியும் இன்று ( 01.11.19) வெள்ளிகிழமை காலை 10.30மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை மே17 இயக்கம் நடத்தியது.
பத்திரிக்கை அறிக்கை.
விரிவான பிராந்திய பொருளாதார உடன்பாட்டு ஒப்பந்தம் (RCEP) தமிழர் நலனுக்கு விரோதமானது:
இதுவரையில் உலகில் பல நாடுகளோடு இந்தியா வர்த்தக ரீதியிலான ஒப்பந்தங்கள் பல செய்திருக்கின்றன. ஆனால் தற்போது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக முரண்கள் அதிகமானதை அடுத்து புதிய ஒப்பந்தங்களுக்கான தேவை உருவாகியிருக்கிறது. அதை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு தான் RCEP ஆகும்.
இந்த அமைப்பில் சிங்கப்பூர் மலேசியா உட்பட ஆசியான் நாடுகளும் இவற்றுடன் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து என மொத்தம் 16 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த அமைப்பில் இணையும் நாடுகள் ஒன்றோடு ஒன்று தங்கு தடையின்றி பொருள்களை ஏற்றுமதி-இறக்குமதி செய்வதற்கு வழி வகை செய்கிறது. ஏற்கனவே இதே வர்த்தகக் காரணங்களுக்காக இந்தியா இந்த அமைப்பிலுள்ள நாடுகளோடு தனித்தனியாக ஒப்பந்தங்கள் போட்டிருந்தாலும், இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
ஏனென்றால் இதுவரை செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களில் மத்திய மாநில அரசுகள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பொருட்கள், சேவைகள் உள்ளிட்ட எதையும் ஒப்பந்தத்திற்குள் இந்தியா சேர்த்ததில்லை.ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இவையனைத்தையும் சேர்க்கும் சரத்துகள் இருக்கின்றது.
ஒருவேளை இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இனிமேல் அரசுத்துறை நிறுவனங்கள் எதுவும் பொருள்களை உற்பத்தி செய்பவர்களிடமிருந்து கொள்முதல் செய்யாது. பொருள்களை கொள்முதல் செய்யவில்லை என்றால் ஏழை எளிய மக்களுக்கு சரியான விலையில் பொருட்களை கொண்டு போய் சேர்க்கும் வழிமுறை தடுக்கப்படும். இந்தியாவின் அனைவருக்கும் ஊட்டசத்துள்ள உணவு என்பது பகல் கனவாகிப்போகும்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே தேவை அடிப்படையில் ஒரு நாட்டில் இருக்கும் ஊழியர்களை இன்னொரு நாட்டிற்கு அனுப்புவதற்கு உள்ள தடைகள் நீக்க வேண்டும் என்று இருக்கிறது. இதன்படி இந்தியாவிற்குள் மேற்சொன்ன கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தொழிலாளர்கள் இறக்கப்படுவார்கள் என்றால் உள்நாட்டு தொழிலாளர்களின் நிலைமை என்னவாகும். ஏற்கனவே தமிழ்நாட்டில் வடஇந்தியர்களின் வருகையால் தமிழர்களின் வேலைகள் பறி போய்க் கொண்டிருக்கிற சூழ்நிலையில், இப்போது வெளிநாட்டில் இருந்தும் தொழிலாளர்களை பணியில் அமர்த்தலாம் என்றால் உள்நாட்டில் ஒருவருக்கும் வேலை கிடைக்காது என்ற நிலைமை உருவாகும். குறிப்பாக பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக இருக்கும் தமிழகத்திற்கு இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அடுத்து மிக முக்கியமானது, இந்த ஒப்பந்தத்தினால் பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதி வரியை நீக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்படும். இது உள்நாட்டு தொழில் துறையை மிகக் கடுமையாக பாதிக்கும். இதனால் தான் அமுல் தயாரிப்பு நிறுவனம் பிரதமருக்கு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாமென்று கேட்டுக்கொண்டது. ஏற்கனவே இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் இந்தியா கோதுமைக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தது. அதனடிப்படையில் கோதுமை மீதான இறக்குமதி வரியை 2016 செப்டம்பரில் 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மோடி அரசு குறைத்தது. அதே வருடம் டிசம்பரில்முற்றிலுமாக வரியை நீக்கி விட்டது.இதனால் இன்று கோதுமை கட்டற்ற முறையில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுகிறது. இது உள்நாட்டில் கோதுமை உற்பத்தியில் முதன்மை மாநிலமாக இருந்த பஞ்சாபின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதேபோல 92 பொருட்களுக்கான இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டுமென்று இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் குறிப்பாக சீனா,கொரியா நீயுஸ்சிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தியாவை நிர்பந்திக்கின்றன.
ஏனென்றால் நியூசிலாந்து பால்-பொருட்கள் ஏற்றுமதியிலும், சீனா ஆயத்த ஆடை – எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்டவற்றிலும், தென்கிழக்காசிய நாடுகள் கடல்சார் உணவு உற்பத்தியிலும், விவசாய உற்பத்தியிலும், கொரியா மின்னனு உற்பத்தி தொழிலும் உலகில் முன்னனி இடத்தை வகிக்கிறது. இவர்கள் மேற்சொன்ன தங்களது பொருட்களை இந்தியாவில் எந்தவித இறக்குமதி வரியுமில்லாமல் விற்கவே இந்த ஒப்பந்தத்தை கொண்டு வருகிறார்கள்.
இந்த ஒப்பந்தம் மட்டும் நிறைவேறினால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை தாண்டி தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும். ஏனென்றால் தமிழகத்தின் பொருளாதார ஆதாரமே விவசாயம், ஜவுளி, ஆட்டோமொபைல், மீன்பிடி மற்றும் சில்லரை வணிகம் தான். இந்த நிலையில் சீனா ஆயத்த ஆடைகள் இங்கு வந்தால் தமிழகத்தின் ஆயத்த ஆடைகளில் முன்னனிலிருக்கும் திருப்பூரில் பல லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும். அதேபோல ஆட்டோமொபைல் தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே முன்னனி மாநிலமாக இருப்பது தமிழகம் தான். இப்படிப்பட்ட நிலையில் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளிலிருந்து கார்களை எந்தவித வரியுமில்லாமல் இறக்குமதி செய்தால் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கார் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு வந்து விடும். மிக முக்கியமான இன்று ஆன் லைன் வர்த்தகத்தில் மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது சீனாவின் அலிபாபா நிறுவனம் தான். இது இந்தியாவிற்குள் எந்தவித வரியுமில்லாமல் நுழைந்தால் இங்குள்ள சிறு வணிகர்கள் தங்களது வணிகத்தை இழக்கும் சூழல் ஏற்படும்.
இவ்வளவு பெரிய பாதிப்பை தமிழகத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே உண்டாக்கும் இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி நவம்பர் 4ஆம் தேதி தாய்லாந்தில் நடக்கும் கூட்டத்தில் கையெழுத்திடக்கூடாதென்று மே 17 இயக்கம் வலியுறுத்துகிறது.