தமிழக அரசே! மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாதே! உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடு! பணி நீக்கம் என்று மிரட்டாதே!

மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவையே!
தமிழக அரசே! மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாதே!உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடு! பணி நீக்கம் என்று மிரட்டாதே!
– மே பதினேழு இயக்கம்

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் 4 நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மருத்துவர்கள் பேராசையுடன் அதிக சம்பளம் கேட்டுப் போராடுவதாக ஒரு பொய்யினை சொல்லி தமிழக அரசு அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறது. மக்களின் சுகாதாரத்தில் எந்த அக்கறையும் இல்லாத அரசாக எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக அரசு இருப்பதையே இது காட்டுகிறது.

மருத்துவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு:

கோரிக்கை 1:
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெறும் வகையில் முதுகலை மருத்துவ உயர் கல்வி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இருந்து வந்தது. இதன் மூலமாகத் தான் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் வந்தார்கள். இதன் காரணமாகத் தான் வேறு மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இப்படித்தான் இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முன்னே வந்தது. இதன் மூலமாகத் தான் பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் கிடைத்து வருகின்றன. நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி அரசு தமிழக மருத்துவக் கட்டமைப்பு உடைபடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கான 50% உயர்கல்வி இடஒதுக்கீடு நீக்கப்படுவதனால் இனி அந்த மருத்துவ இடங்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் கைகளுக்கு சென்றுவிடும். இதனால் அரசு மருத்துவமனைகளின் சிறப்பு பிரிவுகள் பாதிப்பினை சந்திக்கும். இந்த 50% இட ஒதுக்கீட்டினை மீண்டும் கோருவது மருத்துவர்கள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும். இந்த கோரிக்கை அவர்களுக்கான கோரிக்கை மட்டுமல்ல. ஏழை எளிய தமிழ்நாடு மக்களுக்கான கோரிக்கையும் தான்.

கோரிக்கை 2:
இந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை சுட்டிக் காட்டி, தமிழக அரசு பல்வேறு மருத்துவப் பணியிடங்களை ரத்து செய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மருத்துவ சேவைகள் பாதிக்கப்படுகின்றன. நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இடையிலான எண்ணிக்கை விகிதம் இதன் மூலமாக மிகப் பெரும் பாதிப்பினை சந்திக்கும். எனவே மருத்துவப் பணியிடங்களின் எண்ணிக்கையினை ரத்து செய்வதை நிறுத்தி விட்டு அவற்றை உயர்த்த வேண்டும் என்பதும் மருத்துவர்களின் கோரிக்கை.

கோரிக்கை 3:
மத்திய அரசின் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது எப்படிப் பார்த்தாலும் மிகவும் நியாயமான கோரிக்கையே ஆகும். 20 ஆண்டு அனுபவத்திற்கு பிறகு மத்திய அரசுப் பணியில் இருக்கும் மருத்துவருக்கும், தமிழ்நாடு மாநில அரசுப் பணியில் இருக்கும் மருத்துவருக்குமான ஊதிய வேறுபாடு மிகப் பெரிய அளவில் இருக்கிறது. இது களையப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

கோரிக்கை 4:
முதுகலைப் படிப்பு முடித்த அரசு மருத்துவர்களை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் மருத்துவமனைகளில் பணிக்கு அமர்த்த வேண்டும். இதன் மூலமாக தனியார் கல்லூரியில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவர் வேலையில் முன்னுரிமை அளிப்பது தடுக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.

இந்த நான்கு கோரிக்கைகளும் எந்தவிதத்திலும் தவறானவை அல்ல. இவை மக்களாகிய நமக்கும் நன்மை பயக்கக்கூடிய கோரிக்கைகள் தான். மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, மக்களின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டிய தமிழக அரசு, மருத்துவர்களை மிரட்டியும், அவர்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்பியும் வருகிறது.

இது ஒரு நேர்மையான அரசின் செயலாக ஒருபோதும் இருக்க முடியாது. அரசு மருத்துவர்களை பணியை விட்டு நீக்குவோமென்றும், அவர்களை பணி இடமாற்றம் செய்வோம் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மிரட்டுவதென்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை தமிழக அரசு நிறைவேற்றாத காரணத்தினால் தான் மருத்துவர்கள் இப்படிப்பட்ட போராட்டத்தை கையிலெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலிலும் அவசரப் பிரிவுகளில் மருத்துவர்கள் தங்கள் பணியினை செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுதும் பணிபுரிகிற 18,000 மருத்துவர்களில் 15000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தமிழக அதிமுக அரசு தனது தவறினை ஏற்றுக் கொண்டு, மருத்துவர்களை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதே நேர்மையான செயலாக இருக்க முடியும்.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் மருத்துவர்களை நோக்கி கேள்வி எழுப்பாமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து காலம் தாழ்த்தி, மக்களையும் சேர்த்து சிரமத்திற்கு உள்ளாக்கும் தமிழக அரசினை நோக்கி கேள்வி எழுப்புவோம்.

தமிழக மக்களே! போராடும் மருத்துவர்களின் கோரிக்கைக்கு துணை நிற்போம். மருத்துவர்களை பணிநீக்கம் மற்றும் பணியிடமாற்றம் செய்வோம் என்று தமிழக அரசு மிரட்டுவதை வன்மையாக கண்டிப்போம்!

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply