கும்பகோணம் அருகேயுள்ள செருக்குடி என்ற ஊரில் இறந்தபோன தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரின் உடலை பொதுச்சாலை வழியாக இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதை அனுமதிக்காத சாதிய வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற பிரச்சனை அங்கு நடந்தபோது அரசினால் கூட்டப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுச்சாலை வழியாக உடலை கொண்டு செல்லலாம் என முடிவானது. அரசின் அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடந்த மாதம் இறந்த போன தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை பொதுச்சாலை வழியே எடுத்துச் செல்ல முற்படுகையில் மீண்டும் சாதிய வன்மத்துடன் இறுதி ஊர்வலத்தை அனுமதிக்காத ஆதிக்கச் சாதியினர் கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். தாழ்த்தப்பட்ட பெண்கள் நால்வர் மட்டுமே இறந்தவரின் உடலை சுமந்து செல்ல வேண்டிய சாதிய வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையும் சாதியவாதிகளுக்கு உடந்தையாகவே இருந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதன் விளைவாக வன்கொடுமை நிகழ்த்திய ஆதிக்க சாதியினரை கைது செய்ய வேண்டிய நிர்பந்தத்தின் பேரில் சிலரை மட்டும் கைது செய்து, அதே எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தரப்பு நபர்களையும் கைது செய்து ‘நடுநிலைமை’ காத்திருக்கிறது காவல்துறை. இறந்து போனவரின் மகனையும் கைது செய்து சிறையலடைத்திருப்பது கொடுமையிலும் கொடுமை.
விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர், தோழர் குடந்தை அரசனுடன் செருக்குடிக்கு சென்று, இச்சாதிய வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் கேட்டறிந்த மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ,’ தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதற்காக அரசு நமக்கு குறைவான வரி விதிப்பதில்லை. மற்றவர்கள் செலுத்தும் அதே அளவு வரியைத்தான் நாமும் செலுத்துகிறோம். ஆகவே நாம் ஒன்றும் இரண்டாம்தர குடிமக்கள் கிடையாது. நம் வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு அமைக்கப்பட்ட சாலையை நாம் பயன்படுத்துவதை தடுக்கும் சாதிய வன்கொடுமையாளர்கள் மீது சட்ட- ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நமக்கான பொதுச்சாலை உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
இந்த 21ம் நூற்றாண்டிலும் இறந்தவரின் உடலை பொதுச்சாலை வழியாக எடுத்துச் செல்வதற்கு சாதி பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அவமானகரமானது, வெட்கக்கேடானது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் இதே போல் திருநாள்கொண்டசேரியிலும் சாதிய வன்கொடுமை நிகழ்ந்த போது தோழர் குடந்தை அரசனுடன் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நிண்றோம். அதே போல் செருக்குடியின் பிரச்சனைக்கு தோழர் குடந்தை அரசனோடு இணைந்து மே பதினேழு இயக்கம் போராட்டங்களை முன்னெடுக்குமென்று பேசினார்.
பின்னர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் அகியோர் செய்தியாளர்களை சந்தித்து செருக்குடியில் நிழந்த சாதிய வன்கொடுமை குறித்து விளக்கினர்.