மாட்டுக்கறிக்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் கோவையில் பல்வேறு இயக்கங்கள் இணைந்து நடத்தின. கருத்துரிமையை பறிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது.
தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத் தோழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மாட்டுககறி சாப்பிட்டதை முகநூலில் பதிவிட்ட இளைஞரை இந்துத்துவ அமைப்பின் கும்பலைச் சேர்ந்த சிலர் கத்தியால் குத்தியதைக் கண்டித்தும், மாட்டுக்கறிக்கு ஆதரவாகவும் நிர்மல்குமார் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். அவரை கோவை மாநாகர காவல்துறை கைது செய்திருக்கிறது. கருத்துரிமைக்கு எதிரான மோசமான செயலாகவே இந்த கைது நடவடிக்கையை பார்க்க முடியும்.
இந்துத்துவ அமைப்புகளைச் சேரந்த பலரின் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பலமுறை இதே கோவையில் ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டிருந்த பொதும் அவர்கள் கைது செய்யப்பட்டதில்லை. ஆனால் முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை மட்டும் கருத்துரிமைக்கு எதிராக கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது என்றும், பாஜக அரசின் பாசிசப் போக்கை கண்டித்தும் தோழர்கள் முழங்கினர்.