தமிழக அரசே!திருச்சி அகதிகள் சிறப்பு சிறைவதை முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மூன்று தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்று! அனைவரையும் விடுதலை செய்! சிறப்பு முகாமினை இழுத்து மூடு! – மே பதினேழு இயக்கம்
தமிழீழ அகதிகள் மீது பல்வேறு பொய்யான குற்றச் சாட்டுகளை முன்வைத்து அவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் சித்ரவதை முகாமினை, திருச்சி மத்திய சிறைக்குள் தமிழக அரசு நடத்தி வருகிறது.
பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவியுங்கள் அல்லது கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்து இன்று 5 வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது.
இனப்படுகொலையாளனிடமிருந்து தப்பி தமிழ்நாடு நோக்கி தஞ்சம் வந்த தமிழர்களை தமிழ்நாடு அரசும் சிறைமுகாமில் வைத்திருப்பது மிக மோசமான மனிதத் தன்மையற்ற செயலாகும்.
ஆரம்பத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் இயங்கிவந்த சிறப்பு முகாம்களை திருச்சி சிறைக்குள் மாற்றியது தமிழக அரசு.
சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் அனைத்து ஈழ ஆதரவு கட்சிகளும், அமைப்புகளும் இப்போராட்டத்தினை நடத்தியிருக்கின்றன. முகாம்களுக்குள்ளும் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழீழ தமிழர்களை குற்றப் பரம்பரையாக நடத்த இந்த முகாமினை தொடர்ச்சியாக தமிழக அரசு நடத்தி வருகிறுது.
இந்தக் கொடுமையினை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும். சிறப்பு முகாம் எனும் சிறைவதை முகாமினை உடனடியாக இழுத்து மூடவேண்டும், சிறப்பு முகாமிலிருந்து அனைத்து தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010