கடந்த இரண்டு வருடங்களில் (2017-18 & 2018-19) மட்டும் மல்லைய்யா, நீரவ் மோடி போன்ற கொள்ளைகார முதலாளிகள் அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு.
பெரிய பெரிய கார்ப்ரேட் கொள்ளைகார முதலாளிகள் வங்கிகளில் கடனை வாங்கிக்கொண்டு கட்டாமல் அரசின் உதவியோடு சொகுசாக வலம்வருகிறார்கள். ஆனால் பிஜெபி தலைமையிலான மோடி அரசோ நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் இந்த முதலாளிகளை இறுகபிடித்தோம். அதன் விளைவாக வங்கிகளில் முதலாளிகள் வாங்கிய கடன் பெருமளவு குறைந்துவிட்டதென்று ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே வருகிறார்கள்.
ஆனால் உண்மையென்னவென்றால் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த (2004-2014) பத்தாண்டுகளில் முறையில்லாமல் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டது. அதன்பின் 2014 இல் ஆட்சியை பிடித்த மோடி கும்பலோ கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு கூழைகும்பிடு போடுவதில் நாங்கள் எந்தவிதத்திலும் காங்கிரஸ்காரர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்கிற ரீதியில் கார்ப்ரேட் கொள்ளைகாரர்கள் வாங்கிய கடன்களை தொடர்ச்சியாக தள்ளுபடி செய்து வருகிறது. அதவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் கோடி அளவுக்கான பணத்தை ஒரே ஒரு அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டெட் பேங்க் ஆப் இந்தியாவில் மட்டும் செய்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளில் மட்டும் இவ்வளவென்றால் கடந்த ஐந்தாண்டுகளை மற்றவங்கிகளை கணக்கில் கொண்டால் பல லட்சம் கோடியை தாண்டும். இதையெல்லாம் கேட்டால் நாங்கள் தள்ளுபடி செய்யவில்லை ’ரைட் ஆப்’ அதாவது நீண்ட நாட்களாக வசூலிக்க முடியாத கடன் என்ற வகையில் தான் வைத்திருக்கின்றோமென்று சப்பை கட்டு கட்டுகிறது மோடி அரசு.
ஆனால் ’ரைட் ஆப்’ என்பதே கடனை தள்ளுபடி செய்வதற்கு முந்தைய நடவடிக்கைதான். முடிந்தால் வசூல் செய்வார்கள் இல்லையென்றால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தள்ளுபடி செய்துவிடுவார்கள். இதுவரை ரைட் ஆப் செய்யப்பட்ட பணத்தில் கால்வாசிக்கும் குறைவாகவே வசூலித்திருக்கிறார்கள் என்பதுதான் கடந்த கால வங்கிகளின் வரலாறு. தற்போது கூட 1.60லட்சம் கோடி பணத்தை இரண்டு ஆண்டுகளில் ’ரைட் ஆப்’ செய்திருக்கிறாகள். ஆனால் இந்த இரண்டு வருடங்களில் ரைட் ஆப் செய்யப்பட்ட பணத்தில் வெறும் 22ஆயிரம் கோடி அளவுக்கு தான் மீட்டிருக்கிறார்கள். பார்க்க படம் 01
இதேபோல இந்தியாவெங்குமுள்ள வங்கிகளில் பெரிய பெரிய பணக்காரர்கள் வாங்கி கட்டாத கடன் மட்டும் 20லட்சம் கோடியை தாண்டி நிற்கிறது. அதாவது இதுவெல்லாம் முதலாளிகள் வங்கிகளுக்கு கட்டாத பணம் தானே ஒழிய வாங்கிய கடன் அல்ல. வாங்கிய கடன் இதை விட மூன்று நான்கு மடங்கு இருக்கும். உதாரணத்திற்கு இந்தியாவிலிருக்கிற 12முதலாளிகள் வங்கிகள் வாங்கி திரும்ப கட்டாத தொகை மட்டும் 731,000 கோடி (ஏழு லட்சத்தி 31ஆயிரம்) பார்க்க படம் 02. அப்படியென்றாக் இந்தியாவெங்குமிருக்கிற முதலாளிகள் வாங்கிய கடன் எவ்வளவு இருக்குமென்று கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவு பணமும் நம்முடைய பணம். மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம், கணக்கை சரிவர மெயிண்டையன் பண்ணவில்லையென்றால் அபராதம், ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் மில் பணமெடுத்தால் அபராதம், மாதம் இரண்டு லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை இருந்தால் அபராதம், என்று தொட்டதற்கெல்லாம் நம்மிடமிருக்கும் பணத்தை அபராதம் என்ற பெயரில் பிடுங்கியவை. இப்படி பிடுங்கி பணத்தை தான் முதலாளிகளுக்கு தாரை வார்க்கிறார்கள்.
ஆனால் இயற்கை சீற்றத்தாலும் அரசின் தவறான பொருளாதார கொள்கைகளாலும் பாதிக்கப்பட்டு கடனாளியாகி நிற்கும் விவசாயிகள் கடனை இரத்து பண்ணச்சொன்னாலோ அல்லது படித்து முடித்து விட்டு சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கு கடன் உதவி வழங்கச்சொன்னலோ அல்லது மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுக்கச்சொன்னாலோ இந்த சாத்தான்கள் தான் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படையும் என்று வேதம் ஓத ஆரம்பித்துவிடுவார்கள். நாமும் இதை எதை பற்றியும் கவலைப்படாமல் அரசும் வங்கியும் என்னசொல்கிறதோ அதை உடனே கடைப்பிடிக்க ஆரம்பித்துவிடுகிறோம் ஏன்னென்று கேட்கும் சிலரையும் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்திவிட்டு குப்புறபடுத்துக்கொள்கிறோம்.