துரோகங்களுக்கு மத்தியில் தமிழீழம் போராடிக் கொண்டிருக்கிறது. – மே பதினேழு இயக்கம்
மீண்டும் மீண்டும் ஐ.நாவில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்காவும், இந்தியாவும், இங்கிலாந்தும் இணைந்து கொண்டும், இன்னொரு பக்கம் சீனாவும் இலங்கையைக் காப்பாற்றும் வேலையினை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் ஆன பின்பும் நேற்று(21-3-2019) இலங்கைக்கு மேலும் இரண்டு ஆண்டு கால அவகாசத்தினை அளித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தமிழர்களுக்கு அநீதி இழைத்துள்ளது.
இங்கிலாந்து, வட மாசிடோனியா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் இணைந்து இந்த தீர்மானத்தினை ஐ.நாவில் நிறைவேற்றியிருக்கின்றன. இந்தியாவும், அமெரிக்காவும் இந்த தீர்மானத்தில் பின்னிருந்து வேலை செய்திருக்கின்றன. இலங்கையைக் காப்பாற்ற இந்திய பாஜக அரசு வேலை செய்திருப்பதை பல்வேறு செய்தி இணையதளங்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன. 2009-ல் காங்கிரஸ் அரசு செய்த அதே துரோகத்தினை மோடியின் பாஜக அரசு செய்து வருகிறது. தமிழினப் படுகொலையின் கூட்டாளிகளாகவே பாஜகவும் காங்கிரசும் இருக்கின்றன.
இலங்கை அரசினை தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள தமிழர்களின் பிரச்சினையை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் பகடையாக பயன்படுத்தி வருகின்றன. இலங்கை தங்கள் கைப்பிடியிலிருந்து நழுவி விடாமல் இருக்க தமிழர்களின் பிரச்சினையை பயன்படுத்துகின்றன. அதே சமயம் இலங்கைக்கு தண்டனை கிடைத்து விடாதபடியும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்திடாத வகையிலும் கவனமாக பார்த்துக் கொள்கின்றன.
வெளிநாட்டினர் யாரையும் விசாரணைக்கு அனுமதிக்க முடியாது என்று ஐ.நாவிற்குள்ளேயே இலங்கை திமிருடன் சொல்லியிருக்கிறது. போர்க்குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இலங்கைக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் இலங்கை அமைச்சர் பேசியிருக்கிறார். 2015 ஆம் ஆண்டு ஐ.நாவில் தான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மீறி இப்படித் திமிருடன் பேசும் தைரியத்தை இலங்கைக்கு யார் கொடுத்தது? தமிழர்களைப் பாதுகாப்பது போல் நாடகமாடும் ஐ.நா அவையானது பதில் சொல்லியாக வேண்டும்.
இந்த அநீதிகளுக்கு மத்தியில் இலங்கை மீது சர்வதேச விசாரணை கொண்டு வர வேண்டும் என்று தமிழீழத்தின் வடக்கும், கிழக்கும் மிகப் பெரிய போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றன. தமிழீழ மக்களின் எழுச்சி தமிழின எதிர்ப்பு சக்திகளை அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக மாணவர் சமூகத்தின் எழுச்சி அடுத்த தலைமுறையினை தமிழீழத்தின் அரசியல் போராட்டத்தில் இறக்கியிருக்கிறது.
ஐ.நாவினை நம்பிக் கொண்டு கையேந்தி நின்றால் தீர்வு கிடைக்காது என்பதை அவர்கள் உரக்கப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். காணாமல் போன மக்களுக்கு நீதி கேட்டு முழு அடைப்பினை நடத்தியிருக்கிறார்கள். வடக்கும், கிழக்கும் இணைந்ததே தமிழர் தாயகம் என்ற முழக்கத்தினை முன்வைத்து தமிழர்களை பிரிக்கும் சக்திகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
ஐ.நாவின் இந்த துரோகத்தினை அம்பலப்படுத்தி அதன் முகமூடியை கிழித்தெறிய வேண்டிய கடமை உலகத் தமிழர்களுக்கு இருக்கிறது. அமெரிக்காவே, இந்தியாவே, இங்கிலாந்தே தமிழர் பிரச்சினையில் தலையிடாதே, வெளியேறு என்ற முழக்கத்தினை உலகத் தமிழர்கள் எழுப்ப வேண்டியிருக்கிறது.
தமிழீழத்தின் போராட்ட குணத்தினை அழித்து விட முடியாது என்பதை 10 ஆண்டுகளுக்கு பின்பு அறப்போராட்டத்தில் நிற்கும் மக்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு உறுதுணையாக நின்று வல்லாதிக்க அயோக்கியர்களை கேள்வி எழுப்புவது தமிழ்நாடு மற்றும் புலம் பெயர் தமிழர்களின் கடமையாக இருக்கிறது.
தமிழீழம் வாழ்கிறது. போராட்டம் தொடர்கிறது. ஐ.நா, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து கூட்டணியின் துரோகத்தினை கேள்வியெழுப்புவோம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010
22-3-2019