பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை முக்கிய தீர்ப்பு

பொள்ளாச்சி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை வெளியிட்ட வழக்கில் நேற்று (15.03.19) மிக முக்கியமான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கிறது.
——————————————————————————————-
அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருபாகரன் அவர்கள் வெறுமனே அந்தப் பெண்ணிற்கு 25 லட்சம் பணம் கொடுக்க வேண்டுமென்று மட்டும் சொன்னதாக திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மை அது மட்டுமல்ல. அதனூடாக முறையான எந்த விசாரணையும் தொடங்குவதற்கு முன் பொள்ளாச்சி காவல்துறை கண்காணிப்பாளர் எப்படி இத்தனை காணொளிகள் தான் இருக்கிறது, இத்தனை பெண்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்ற விவரத்தை வெளியில் சொல்ல முடியும். இது சட்டத்திற்கு புறம்பானது. ஆகவே அவரின் மீது தமிழக அரசு துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு முக்கியமான தீர்ப்பையும் சொல்லி இருக்கிறார்.

மேலும் 2012இல் டெல்லியில் நிர்பயா என்ற மாணவிக்கு ஏற்பட்ட கொடூரங்களுக்கு பின் அமைக்கப்பட்ட வர்மா கமிசன் ஆணையின் அடிப்படையில் செக்‌ஷன் 228(A) என்ற சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்ததே தவிர, வர்மா கமிசன் மிக முக்கிய பரிந்துரையான ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாலியல் துன்புறுத்தல் களால் பாதிக்கப்படும் பெண்களுக்கான ‘பாதுகாக்கப்பட்ட இலவச ஆலோசனை மையங்கள்’ திறக்கப்பட வேண்டும் என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுவரை கடை பிடிக்கவில்லை. ஆகவே இதனை அரசு உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

அதோடு பொள்ளாச்சி சம்பவத்தில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவதால் வெறும் அரசின் கடமையோடு இது நின்றுவிடவில்லை. பொதுமக்களும் அந்த காணொளிகளை தொடர்ந்து சமூகவலைதளங்களில் பரப்புவதை நிறுத்த வேண்டும். சமூக பொறுப்புள்ளவர்களாக பொதுமக்களும் இதில் சில அடிப்படை அறங்களை கடைபிடிக்க வேண்டும். மேலும் ஏற்கனவே இணையவெளியில் இருக்கும் காணொளிகளை அரசின் கட்டுபாட்டில் இயங்கும் இணையதள கட்டுப்பாட்டு வாரியத்தின் துணையுடன் உடனடியாக அழித்துவிடவேண்டும்.

ஆகவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு அரசு 13.3.2019 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அவரது சகோதரர் பெயர் மற்றும் அவர்கள் படிக்கும் கல்லூரியின் பெயரோடு வெளியிட்ட அரசாணை G.O .MS. NO. 169ஜ இரத்து செய்துவிட்டு, புதிதாக ஒரு அரசாணையை வெளியிட வேண்டும் என்றும், வேண்டுமென்றே பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட்ட காவல்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை வேண்டுமென்றே வெளியிட்டு அந்த பெண்ணிற்கு சமூக குறைவை ஏற்படுத்தியதற்காக பிரிவு 228(A) படி குறைந்தபட்ச இழப்பீடாக 25 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்று மிக விரிவான ஒர் தீர்ப்பை நீதிபதி கூறியிருக்கிறார்.

மே 17 இயக்கம்
9884072010

Leave a Reply