பொள்ளாட்சியில் தொடர் பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்ட மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். – மே பதினேழு இயக்கம்

பொள்ளாட்சியில் தொடர் பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்ட மனித மிருகங்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். – மே பதினேழு இயக்கம்

பொள்ளாட்சியில் ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமான கும்பல் தொடர்ச்சியாக பல பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்புணர்வு செய்தும், அவர்களை வீடியோ எடுத்து மிரட்டியும் மனித குலத்துக்கே விரோதமான மிக மோசமான செயலை மேற்கொண்டு வந்திருக்கிறது. இதனை தொடர்ச்சியாக சில பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி வருகின்றன. இந்த மனித மிருகங்கள் அந்த பெண்களுக்கு செய்துள்ள கொடுமைகளைப் பற்றி கேட்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

தற்போது இந்த கும்பலை பாதுகாக்கும் வேலையினை தமிழக ஆளும் அரசைச் சேர்ந்த அதிகாரிகளும், அதிமுகவின் முக்கியப் புள்ளிகளும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வருகிறது. இது மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் முக்கியப் புள்ளிகளுக்கு நெருக்கமான சிலரும் இந்த கும்பலில் இருப்பதாகவும், அவர்களை காப்பாற்ற காவல்துறை முயல்வதாகவும் குற்றச்சாட்டுகளை பல செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட செயல்கள் சமூகத்தில் தொடர்வது பெண்களின் பாதுகாப்பினை மேலும் கேள்விக்குறியாக்கும். அடுப்பங்கறையிலிருந்து வெளியே வந்து பல சாதனைகளை புரிந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியான அச்சத்தினை உருவாக்கி மீண்டும் அடுப்பங்கறைக்குள் அடைபடும் நிலையினை இம்மாதிரியான குற்றங்கள் உருவாக்கும். இப்படிப்பட்ட மிருகங்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மனிதப் பிறவிக்கே இழிவினை ஏற்படுத்தியுள்ள இந்த கும்பலையும், அவர்களுக்கு உதவுபவர்களையும், ஒட்டு மொத்த சமூகமும் சமூகப் புறக்கணிப்பு செய்ய வேண்டும்.

ஆளும் அதிமுக இந்த கும்பலை காக்க முற்படுமானால் அந்த கட்சி தமிழ் மண்ணிலிருந்து மக்களால் முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பொள்ளாச்சியில் பெண்களை கூட்டு பாலியல் வண்புணர்வுக்கு உள்ளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டிய ஒட்டுமொத்த வலைப்பின்னலும் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இந்த விசாரணையில் ஆளும் அரசின் மீது சந்தேகம் எழுப்பப்படுவதால் சிவில் இயக்கங்கள், மகளிர் அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரையும் இணைத்துக் கொண்டு விசாரணையை மேற்கொள்வதே காவல்துறையின் நடவடிக்கைகள் மீதான நம்பிக்கையின்மையை போக்கும்.

இந்த கும்பலுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படாவிட்டால், ஜனநாயக அமைப்புகளை ஒன்று திரட்டி மே பதினேழு இயக்கம் போராட்டங்களை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply