கால்டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசே உடனே நடவடிக்கை எடு! ஓட்டுநர்கள் மீது அதிகார துஷ்பிரயோகத்தை காவல்துறையினர் பயன்படுத்துவதை தடுக்க ஒழுங்கு நடவடிக்கைகளை உடனே கொண்டு வா! – மே பதினேழு இயக்கம்
கால்டாக்சி ஓட்டுநரான ராஜேஷ் அவர்கள் பாடியில் இருந்து அண்ணா நகர் வரும் வழியில் தனது காரில் இருந்த போது, அங்கிருந்த காவல்துறையினர் அவரிடம் மிக மோசமாக நடந்துகொண்ட காரணத்தினால் அவர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காவல்துறையினரால் தான் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர் தற்கொலைக்கு முன்பு வீடியோ வாக்குமூலம் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
கொச்சையான வார்த்தைகளால் அவரை திட்டி அவரது தனிநபர் மாண்புக்கு மிகப்பெரும் இழுக்கினை காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவின் அரசியல் சாசனப்படியும், சர்வதேச மனித உரிமைகள் விதியின் படியும் இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். தமிழக காவல்துறையினர் பொதுவாகவே மனித உரிமை விதிகளை எப்போதும் பின்பற்றுவதில்லை.
குறிப்பாக சாதாரண உழைக்கும் மக்களை மிகவும் கொச்சையாக நடத்துவதையும், சட்டவிரோதமாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை தாக்குவதையும், இரவு நேரங்களில் நடந்து செல்வோரை அசிங்கமாக திட்டி மிரட்டுவதையும், சட்டவிரோதமாக காவல்வாகனங்களில் ஏற்றிச் சென்று காவல்நிலையங்களில் அமரவைப்பது போன்ற அப்பட்டமான சட்டவிரோத, மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக சமீப காலங்களில் கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு எதிராக இது அதிகரித்து வருகிறது. அவர்களிடம் பெருமளவிலான பணம் பறிப்பது மட்டுமல்லாமல், மரியாதையின்றி கீழ்த்தரமாகவும் சில காவல்துறையினரால் நடத்தப்படுகிறார்கள்.
மாநில மனித உரிமைகள் ஆணையமும், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் காவல்துறையினர் மீது நடவடிக்கைகள் எடுப்பதில் செயலற்றுக் கிடக்கின்றன. காவல்துறையினர் தங்கள் அதிகார துஷ்பிரயோகத்திற்காக தண்டிக்கப்படாமல் இருப்பதே, இதுபோன்ற குற்றங்களை தொடர்ந்து செய்யும் மனப்போக்கினை அவர்களுக்கு அளிக்கின்றன.
அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும். புதிய உழைப்பாளர் வர்க்கமாய் உருவெடுத்துள்ள கால்டாக்சி ஓட்டுநர்களின் பாதுகாப்பு மற்றும் தனிநபர் மாண்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீதான சுரண்டல்களை தடுத்து அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு, தொழிலாளர் சட்டங்களின் அடிப்படையிலான வேலை நேரம், ஊதியம் போன்றவை அளித்திட தமிழக அரசு உடனடி நடவடிக்கையினை எடுத்திட வேண்டும்.
ஓட்டுநர் ராஜேஷ் மரணத்திற்கு நீதி வேண்டும். ஓட்டுநர்களின் கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் மே பதினேழு இயக்கம் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010