தமிழர் விரோத இந்தியாவின் குட்டு அம்பலமானது

தமிழர் விரோத இந்தியாவின் குட்டு அம்பலமானது

பூகோள ரீதியாக இந்தியாவிற்கு மிக மிக அருகாமை நாடாக இலங்கை இருப்பதால், இந்தியாவின் பாதுகாப்பு என்பது இலங்கையின் பாதுகாப்போடு மிகவும் தொடர்புடையது என்றும், ஆகவே இலங்கையில் இன்னொரு நாடு நுழைவதை இந்தியா விரும்பவில்லை. அதனால்தான் இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது இலங்கையின் திருகோணமலை பகுதியில் அமெரிக்க நுழைவதை அவர் மிகக் கடுமையாக எதிர்த்தார். அதற்காகவே போராளி குழுக்களுக்கு ஆயுதம் கூட வழங்கி உதவி செய்தது இந்திய அரசு.

இந்நிலையில் 2009இல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசோடு இந்தியா முழுமூச்சாக துணை நின்றது. இதை எதிர்த்து தமிழர்கள் கேட்கும் போதெல்லாம் இலங்கைக்கு இந்தியா உதவி செய்யவில்லை என்றால் சீனா உள்ளிட்ட வேறு நாடுகள் இலங்கைக்குள் புகுந்து விடும். அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று பதில் கூறினார்கள்.

ஆனால் போர் முடிந்த உடனேயே இலங்கை அரசு இந்தியாவை முற்றுமுழுதாக கைவிட்டு விட்டு சீனாவின் பக்கம் நின்றது. இலங்கையின் பல முக்கியமான திட்டங்கள் சீனாவிற்கு கொடுக்கப்பட்டது. மிக முக்கியமாக இந்தியாவிற்கு மிக மிக அருகாமையில் சீனா (Port City) செயற்கையாக ஒரு துறைமுகத்தை அமைத்துக்கொள்ள இலங்கை ஒப்புதல் கொடுத்து விட்டது. அதன்படி அந்த திட்டம் இன்று கிட்டதட்ட முடிவடையும் நிலையில் இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த தெற்காசிய பிராந்தியத்தில் தனக்கான வலுவான இராணு தளம் வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட நாள் ஆசையையும் இப்போது இலங்கை அரசு நிறைவேற்றி இருக்கிறது. அதன்படி தான் சிரியாவில் நடக்கும் யுத்தத்தில் பயன்படுத்தப்படும் அமெரிக்க போர்க்கப்பல்களை வழிநடத்தும் விமானம் தாங்கிய கப்பலான U.S CVN 74 John C.Stennis (படம் 1பார்க்க) என்ற கப்பல் அரபிக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த போர்கப்பலுக்கு தேவையான விநியோகப் பொருள்கள் கொண்டுச்செல்ல இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தை கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதம் என இருமுறையும்,இந்த ஆண்டில் சனவரி 21 லிருந்து 29 வரை (நேற்று வரை) அமெரிக்கா பயன்படுத்துகிறது.

இப்படி அமெரிக்க விமானம் தாங்கி கப்பலுக்கான விநியோகங்கள் இடம்பெறும் காலப்பகுதியில் அமெரிக்க படையினர் அவர்களின் ராணுவ தளவாடங்கள் ஏனைய பொருட்கள் இலங்கையில் தற்காலிமாக தங்கியிருப்பதற்கான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆக கிட்டத்தட்ட தெற்காசியாவில் டியேகோ கார்சியா இராணுதளத்திற்கு பிறகு இலங்கை அமெரிக்காவின் இராணுவத் தளமாக மாறிவிட்டது என்பதை இதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

ஆக வேறு நாடுகள் இந்தியாவிற்குள் நுழைவதை தடுக்கத்தான் இலங்கைக்கு உதவுகிறோமென்று இந்தியா சொன்னது பொய்யென்று நிருபணமானது. இது முழுக்க முழுக்க தமிழர்களை அழிக்கவேண்டுமென்ற ஒன்றை நோக்கத்தோடு இந்தியா செயல்பட்டதும் அம்பலமாகியுள்ளது.

 

Leave a Reply