இன்று என் வாழ்வில் பொன்னான நாள்!
இன்னும் சிறிது நேரத்தில் சாகப்போகிறோம் என்ற நிலையில் இறுதியாக தனது டைரியில் ஒருவன் தான் சாகும் நாளை ”பொன்னான நாள்” என்று எழுத முடியுமா என்றால் முடியுமென்று இந்த உலகிற்கு சொன்னவன் முத்துக்குமார்.
ஏன் அப்படிச்சொன்னான். சொந்த தமிழினம் ஈழத்தில் சாதல் கண்டும் சொரனையற்ற கூட்டமாக தமிழர்கள் இருப்பதா? கொத்து குண்டுகள் ஈழத்தமிழர்களின் உடல்கள் துளைப்பதை கண்டும் தமிழன் ஒன்றுபடாமல் இருப்பதா? என்று வெம்பி இந்த தமிழனை ஓர்மைபடுத்தும் வேலையை இன்று என் உயிர் கொடுத்து செய்யப்போகிறேன் என்பதற்காகத்தான் தான் சாகும் நாளை பொன்னான நாள் என்று எழுதிவைத்துவிட்டு செத்தான் மாவீரன் முத்துக்குமார்.
தன் மேனி எறியும்போதும் அய்யோ அம்மா என்று குரலெழுப்பாமல். ஈழத்தமிழரின் மீதான போரை இந்திய அரசே நிறுத்து! தமிழனை காப்பாற்றுங்கள் என்று குரலெழுப்பிய மாவீரன்.
நீ எதற்காக இறந்தாய்? உனக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? என்று வழக்கும்போல மடைமாற்றும் வேலையை அரசு செய்யமுயன்ற போது, ஈழத்தமிழரை கொல்ல இந்திய அரசு ஆயுதம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.இந்தியா தமிழனுக்கு துரோகமிழைக்கிறது என்பதை வெளிக்காட்டவே நான் தீக்குளித்தேன் என்று தெளிவாக சொன்னவன்.
இதையும் மீறி நீ எந்த சாதி என்ற கேட்டதற்கு நான் ”தமிழ்சாதி” என்று இருமாப்புடன் சொன்ன தமிழ்வேங்கை மாவீரன் முத்துக்குமார். அவனின் இந்த தியாகம் பல்லாயிரக்காணக்கான இளைஞர்களை போராட்டகளத்திற்கு அழைத்து வந்தது. அவனின் ’அறிவாயுதம் ஏந்துங்கள்’ என்ற முழக்கம் தமிழர்களின் போராட்டத்தின் திசை வழியை காட்டியது. அதில் நடைபோடும் இயக்கமாகவே மே பதினேழு இயக்கம் தன்னை தகவமைத்துக்கொண்டது.
அந்தவகையில் தமிழினம் காக்க தன்னுயிரை தந்த மாவீரன் முத்துக்குமாருக்கு எங்களின் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.