தமிழக அரசே!
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து அவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்று! – மே பதினேழு இயக்கம்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 88 பெண் ஆசிரியர்கள் உட்பட 170 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னரும் அவர்களின் கோரிக்கைக்கு தமிழகஅரசு மதிப்பளிக்காமல் தாமதப்படுத்துவது கண்டனத்திற்குரியதாகும்.
2009 ஜூன் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் மிகப் பெரிய முரண்பாடு பின்பற்றப்படுகிறது. 2009 ஜூன் மாதத்திற்கு முன்பு பணியில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் அதற்குப் பின்னர் சேர்க்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் இடைநிலை ஆசிரியர்கள் மிகப்பெரிய போராட்டத்தினை முன்னெடுத்தனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அரசு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி தந்தது. அதனையொட்டி தங்களது போராட்டத்தினை இடைநிலை ஆசிரியர்கள் ஏப்ரல் மாதம் முடித்துக் கொண்டார்கள். ஆனால் அதற்குப் பிறகு தமிழக அரசு அது குறித்தான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ச்சியாக தாமதப்படுத்தி வந்தது. இந்நிலையில் டிசம்பர் 23 அன்று மீண்டும் தங்கள் போராட்டத்தினை துவங்க இடைநிலை ஆசிரியர்கள் தரப்பில் முடிவெடுத்தது. சென்னை டிபிஐ வளாகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை துவங்கினர். அவர்களை கைது செய்த காவல்துறை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவர்களை அடைத்து வைத்தது. ராஜரத்னம் மைதானத்தில் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை நிறுத்தாமல் மேற்கொண்டு வருகிறார்கள்.
நான்கு நாட்களாக உணவு கூட அருந்தாமல் இரவிலும் தங்கள் போராட்டத்தினைத் தொடர்ந்து வருகிறார்கள். தனது குழந்தைகளுடன் வெட்டவெளி மைதானத்தில் அமர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு இந்த நாட்டின் ஆசிரியர் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை என்பது மிக மிக நியாயமான கோரிக்கை ஆகும். அதனை நிறைவேற்ற மறுப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணம் ஆகும். இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க முயலாமல் அவர்களின் போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழக அரசு உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே 17 இயக்கம் தனது தார்மீக ஆதரவை வழங்குகிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010