கஜா புயலில் வாழ்வை இழந்து நிற்கும் விவசாயிகள், மீனவர்கள் இனி எதிர்கொள்ளப் போகும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்தும், அரசின் செயலற்ற தன்மை குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு மே பதினேழு இயக்கம் சார்பில் இன்று 05-12-2018 அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, லெனா குமார் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பத்திரிக்கையாளர்களிடம் சமர்பிக்கப்பட்ட பத்திரிக்கை குறிப்பு பின்வருமாறு:
கடந்த நவம்பர் 15ஆம் தேதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலினால் கிட்டதட்ட ஏழு மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மே 17 இயக்கம் நிவாரண பொருட்கள் வழங்கியதோடு அங்குள்ள களநிலவரத்தை அறிந்து தனது முதல் கட்ட அறிக்கையினை கடந்த 19.11.18 அன்று வெளியிட்டது. ஆனால் இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரிவர நிவாரண பொருட்களே கிடைக்காத சூழலில், அவர்களுக்கு தற்போது மிகப்பெரிய வாழ்வாதார சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனை வெளிக்கொண்டுவரவே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பினை நடத்துகிறோம்.
இந்த கஜா புயலினால் டெல்டாவின் 7 மாவட்டங்களிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கிட்டதட்ட 20 முதல் 30 ஆண்டுகள் வரை பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்கிற நிவாரணப் பணி என்பது ஆபத்திலிருப்பவருக்கு உடனடியாக கை தூக்கி விடுவதைப் போன்றதே. ஆனால் ஒரு பெரும் துயரம் அந்த மண்ணில் நிகழாமல் தவிர்த்திட வேண்டும் என்றால், இந்த புயல் பாதிப்பை இந்திய அரசு உடனடியாக தேசியப் பேரிடராக அறிவித்து இழப்பீடு மற்றும் மீள் கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
ஏன்னென்றால் இன்னும் புயலினால் ஏற்பட்ட விவசாய கழிவுகள் விவசாய நிலங்களிலேயே குவியல் குவியலாக கொட்டிக் கிடக்கின்றது. அதனை அப்புறப்படுத்த பெரும் தொகை தேவைப்படும் எனும்பட்சத்தில் இது அங்குள்ள மக்களால் இப்போதைக்கு சாத்தியமில்லை. அரசு புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிக்கு கொடுப்பதாக சொல்லியிருக்கிற இழப்பீடு என்பது நிலத்தில் இருக்கிற கழிவுகளை அகற்றவே பத்தாது என்பது தான் களநிலவரமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் எங்கேயிருந்து விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்க முடியும்.
அதேபோல அங்கு விவசாய கூலிகளாக இருப்பவர்கள் நிலைமை இன்னும் மோசம். ஏன்னெறால் விவசாயமே நடக்காத போது அதில் கிடைக்கும் தினக்கூலியைக்கொண்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்தவர்களுக்கு ஒரே நாளில் எதுவுமில்லை என்ற நிலைக்கு ஆகிவிட்டது. தங்குவதற்கு வீடில்லாமல் அன்றாட அடிப்படை செலவுக்கு பணமில்லாமல், குழந்தைகளின் பள்ளிகளுக்கு கட்டணம் கட்டமுடியாமல், ஏற்கனவே கடனாக வாங்கிய பணத்திற்கான மாதத்தவணைகளை கழுத்தை இறுக்கும் சூழல் என்று விவசாய கூலிகளின் நிலைமை வார்த்தைகளால் சொல்ல முடியாத சோகமாக மாறி நிற்கிறது.
மேலும் புயலுக்கு பின் அங்கு தீடிர் தீடிரென்று பெய்யும் மழை மற்றும் நிலவுகின்ற கடுமையான குளிர்காலச் சூழல் போன்றவை வீடு இழந்து நிற்போரை உடல்நிலை தொடர்பான சிக்கலுக்குள் தள்ளுகிறது. குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் புயல் விட்டுப்போயுள்ள கழிவுகள் அகற்றப்படாத சூழல் மற்றும் மின்சாரம் இல்லாததால் எதிர்கொள்ள நேரிடும் கொசுக்கடி போன்றவை வேகமாக தொற்றுநோய் பரவுவதற்குரிய வாய்ப்பாக இருக்கிறது.
இதுதான் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தின் இன்றைய நிலை. இது வெறும் அவர்களோடு மட்டும் முடிந்துபோகிற பிரச்சனையில்லை. டெல்டா மக்களின் இந்த பிரச்சனை தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும் வாய்ப்புமிருக்கிறது. தமிழகத்தின் நெல் தேவை மற்றும் தேங்காய் தேவையை பூர்த்தி செய்ததில் காவிரி டெல்டாவின் பங்கு அதிகமானது. இப்போது ஏற்பட்டிருக்கிற இந்த இழப்பினால் பல மெட்ரிக் டண் அரிசி உற்பத்தியும், தேங்காய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மேற்ச்சொன்ன உணவுபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
மேற்கூறிய நிலைமைகளை கருத்தில் கொண்டு பின்வரும் மிக முக்கியமான கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக முன்வைக்கிறோம்.
இந்திய அரசே! தமிழக அரசே!
1.கஜா புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவி.
2. டெல்டா மக்களின் விவசாயக் கடன்கள், கூட்டுறவுக் கடன்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களில் வாங்கிய கடன்கள் போன்ற அனைத்தும் உடனடியாக தள்ளுபடி செய்!
3. தேசிய வங்கிகள் மூலமாக வட்டியில்லா தொழில் கடன், விவசாயக் கடன், கல்விக் கடனை வழங்கிடு!
4. சாய்ந்த தென்னை மரங்கள், மாமரங்கள், அனைத்து இயற்கை கழிவுகளையும் அரசே அகற்றிடு!
5. டெல்டா மாணவர்களின் இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை அரசே பொறுப்பேற்றிடு!
6. பல்வேறு சுய உதவிக் குழுக்களில் மக்கள் பெற்ற கடனுக்கு அரசே பொறுப்பேற்றிடு!
7. விவசாயக் கூலிகளுக்கு அடுத்த 6 மாதத்திற்கான குடும்ப செலவுகள், உணவு தானியங்களை வழங்கிடு!
8. விவசாயிகள் மறு உற்பத்தி செய்வதற்கான நீண்ட கால கடனை NABARD வங்கி மூலம் வழங்கிடு!
9. பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான சேதாரத்தினை அரசே ஏற்றிடு!
– மே பதினேழு இயக்கம்
9884072010