ராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்

ராஜலட்சுமியைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும்போதே சிறுமி சவுமியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் மலைக்கிராமத்தினைச் சார்ந்த பழங்குடி மாணவி சவுமியா, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். தீபாவளிக்கு ஊருக்கு வந்த போது, தனது இயற்கை உபாதையினை கழிக்கச் சென்ற போது ரமேஷ் மற்றும் சதீஷ் என்ற இரண்டு கயவர்கள் சவுமியாவை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிவிட்டு ஓடியிருக்கிறார்கள். மயங்கிக் கிடந்த சவுமியாவை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டிற்கு தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.

சம்பவம் நடந்த நவம்பர் 5 அன்றே, சவுமியாவின் பெற்றோர் இது குறித்து கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருக்கிறார்கள். ஆனால் சவுமியாவின் பெற்றோரின் புகாரை இரண்டு முறை காவல்துறையினர் வாங்க மறுத்துள்ளனர். பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது பழங்குடி பெண் தானே, என்ற அதிகாரத் திமிருடன் காவல்துறையினர் நடந்துள்ளனர். பின்னர் சவுமியாவின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னரே புகாரினை காவல்துறையினர் எடுத்திருக்கிறார்கள்.

அப்போது கோட்டப்பட்டி காவல்துறையினர் சவுமியாவின் பெற்றோரிடம், பாலியல் வன்புணர்வு நடைபெற்றதை வெளியில் சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். மருத்துவமனையிலும் அவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட செய்தியினை மருத்துவர்களிடம் சொல்லாமல் மூச்சுத் திணறல் என்று சொல்லி மறைத்திருக்கிறது காவல்துறை.

அப்போதும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சவுமியாவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், காவல்துறையினர் 7ம் தேதி அன்று குழந்தைகள் நலக் காப்பகத்தில் தங்க வைத்திருக்கிறார்கள். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், சவுமியாவின் உடல்நிலை இரண்டு நாட்களில் மோசமடைந்துள்ளது. அதன் பிறகு தான் சவுமியா தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போதும் சாதாரண வார்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மாணவிக்கு நடந்த கொடுமையினை மறைத்தும், உடனடியாக புகாரைப் பெறாமலும், குற்றவாளிகளை தப்பிக்கவைக்க காவல்துறையினர் முயன்றிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. மாணவி சவுமியாவின் கொலைக்கு காவல்துறையும், தமிழக அரசுமே பொறுப்பேற்க வேண்டும். தமிழக அரசு இத்தகைய பாலியல் குற்றங்களை தடுத்திடும் செயல்திட்டத்தினை உருவாக்க எந்த முயற்சியும் எடுக்காத காரணத்தினால் தான் பெண்குழந்தைகள் மீதான கொடுமை அதிகரித்து வருகிறது.

பழங்குடி மக்கள் தானே, ஒடுக்கப்பட்ட மக்கள் தானே, ஏழை பெண்கள் தானே என்ற அகம்பாவ மனோப்பாங்கு இந்திய காவல்துறையிடமும், மத்திய, மாநில அரசுகளிடமும் ஓங்கிக் கிடக்கிறது. இதனை ஒழித்திடாமல் இந்த சம்பவங்கள் தொடர்வதை நிறுத்திட முடியாது. தேனி ராகவி, சேலம் ராஜலட்சுமி, தர்மபுரி சவுமியா என்று தொடர்ச்சியாக நிகழும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்திட முழுமையான செயல்திட்டத்தினை உடனடியாக இந்திய அரசும், தமிழக அரசும் உருவாக்கிட வேண்டும்.

மாணவி சவுமியாவின் கொலைக்கு துணை போன கோட்டப்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ”நான் நன்றாகப் படித்து, நல்ல வேலைக்கு சென்று, கூலி வேலைக்கு செல்லும் தனது பெற்றோரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவேன்” என அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த சவுமியாவுக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக ஒட்டு மொத்த தமிழகமும் எழுந்து நின்று குரல் கொடுக்க வேண்டும். மாணவி சவுமியாவின் நீதிக்காக போராடி வரும் பழங்குடி கிராம மக்களுக்கு தமிழக மக்கள் துணை நிற்போம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply