சிறுமி ராஜலட்சுமி படுகொலை! சமூகத்தின் மனசாட்சி குற்றவுணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும்!
சேலம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ராஜலட்சுமி, தினேஷ் என்ற கயவனால் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு என்பது மிகக் கொடூரமானதும், மனித சமூகத்திற்கே அவமானம் விளைவிக்கிற செயலும் ஆகும். படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மனிதநேயம் கொண்டோரின் மனசாட்சியினை உலுக்கி வருகிறது.
ஆனால் டெல்லி நிர்பயா கொலை போன்றோ, சென்னை சுவாதி கொலை நிகழ்வைப் போன்றோ இந்த ஏழை சிறுமியின் படுகொலை சமூகத்தில் இன்னும் விவாதமாக்கப்படவில்லை என்பது துயரமானதே. பெண்களுக்கு எதிரான குற்றம் என்பதும், சிறுவயது பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் என்பதும் சமூகத்தில் தொடர்கதையாகவே மாறி இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், கேட்பதற்கு ஆளற்றவர்களாக, விளிம்பு நிலையில் இருப்பதால் அவர்கள் மீதான வன்கொடுமை என்பதும், தாக்குதல் என்பதும் எளிதாக நடைபெறும் ஒன்றாக இருக்கிறது. ஒரு நாளைக்கு இந்த நாட்டில் 6 ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதாக NCRB(National Crimes Record Bureau) தெரிவிக்கிறது.
பெண்கள் மீதான தாக்குதல்களிலும், வன்கொடுமைகளிலும் கூட வர்க்கமும், சாதியும் பார்த்துத்தான் பேசுபொருளாக்கப்படுவது என்பது மிகவும் தவறான ஒன்றாகும். பெண்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்களை நிறுத்துவதற்கான, சமூக மாற்றத்தினை நோக்கிய வேலைத் திட்டத்திற்கு இந்த அரசாங்கம் தயாராகி ஆக வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான ஆணையங்களின் பரிந்துரைகளை உடனடியாக இந்திய அரசும், தமிழக அரசும் நடைமுறைப்படுத்திட வேண்டும். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்கள் மீது எளிதாக நிகழ்த்தப்படும் இத்தகைய தாக்குதல்களை ஒடுக்கி, தடுத்திட தனி நிர்வாகங்களை உருவாக்கிட வேண்டும்.
சுவாதி கொலையும், நிர்பயா கொலையும் உருவாக்கிய நடுக்கத்தினை ராஜலட்சுமியின் படுகொலையும் இந்த சமூகத்திற்கு ஏற்படுத்த வேண்டும். நாகரீகமடைந்தத்தாக சொல்லப்பட்டு, ஆனால் நாகரிகத்தின் விளிம்பைக் கூட தொடாத இந்த சமூகத்தின் மனசாட்சி குற்ற உணர்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தினேஷ் போன்ற கீழ்த்தரமான மனித மிருகங்களும், அவனது செயலுக்கு துணைபோவோரும் கடுமையான தண்டனைக்கும், சமூக புறக்கணிப்பிற்கும் உள்ளாக்கப்பட வேண்டும்.
கடந்த 70 ஆண்டுகளாக இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமூக ஊடங்களின் வளர்ச்சியினால் மட்டுமே இத்தகைய குற்றங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் இந்திய அரசு இவற்றை களைவது குறித்த எந்த கவலையுமின்றி இந்தியா ஒளிர்வதாக பேசி வருகிறது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் இதற்கான தீர்வு எதுவும் வழங்கப்படாமலே இத்தனை ஆண்டுகள் கடத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஜனநாயக சக்திகள் கைகோர்த்து சமூக அவலங்களுக்கும், பாலியல் குற்றங்களுக்கும், சாதிய வன்மங்களுக்கும் எதிராக நிற்பதென்பது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்பதையே இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
மே பதினேழு இயக்கம்
9884072010
படம் 2: ராஜலட்சுமியின் பெற்றோர் (சின்னப் பொண்ணு-சாமிவேல்
படம் 1: கொலைகாரன் தினேஷ்
படம் 3: சிறுமி ராஜலட்சுமி