யமஹா, ராயல் என்ஃபீல்ட், MSI ஆகிய தொழிற்சாலைகளின் 2500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மே பதினேழு இயக்கம் தனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது.
தொழிற்சங்க உரிமை, ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு மாத காலமாக யமஹா(Yamaha), ராயல் என்ஃபீல்ட்(Royal Enfield), MSI (Myoung Shin Automotive India Pvt Ltd) நிறுவனங்களின் தொழிலாளர்களின் போராடி வருகிறார்கள்.
தொழிலாளர்களின் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசோ, தொழிற்சாலை முதலாளிகளுடன் நின்று கொண்டு தொழிலாளர்களை கைது செய்வது, அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து சோதனை என்று மிரட்டுவது, வழக்கு போடுவது என பல்வேறு அடக்குமுறைகளை காவல்துறையின் மூலமாக மேற்கொண்டு வருகிறது.
பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின் பணிக்கு திரும்பிய தொழிலாளர்களிடம், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியதற்கு மன்னிப்பு கடிதம் கேட்கிறது ராயல் என்ஃபீல்ட் நிர்வாகம்.
தொழிற்சங்கம் அமைக்கும் வேலையை மேற்கொண்டதற்காக இரண்டு நிரந்தர தொழிலாளர்களை பணியை விட்டு நீக்குகிறது யமஹா நிர்வாகம்.
நேர்மையான சம்பள உயர்வினை அளிக்காமல், பணி நிரந்தரம் செய்யாமல், ஏராளமான அளவு ஒப்பந்த பணியாளர் முறையில் வேலை வாங்கும் MSI(மையாங் ஷின் ஆட்டோமேட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் – Myoung Shin Automotive India Pvt Ltd) நிறுவனத்தின் விதி மீறல்களை எதிர்த்து கொரிய தூதரகத்தில் மனு அளிக்கச் சென்றால். தொழிலாளர்களை கைது செய்கிறது காவல்துறை.
தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களை தமிழக அரசு முடக்குவதென்பது, இந்த அரசின் அப்பட்டமான முதலாளிய பாசத்தையே காட்டுகிறது. தொழிலாளர் நல சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது, அவற்றை காலில் போட்டு மிதிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், போராடும் தொழிலாளர்களை தமிழக அரசு ஒடுக்கி வருகிறது.
மேக் இன் இந்தியாவினை காரணம் காட்டி தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் கொண்டு வந்து, அந்த சட்டங்களை முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர் சட்டங்கள் நீர்த்துப் போகச் செய்யப்படுவதென்பது, இந்த நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும்.
எனவே தமிழக மக்கள் அனைவரும் தொழிலாளர் போராட்டத்திற்கு பக்கபலமாக ஆதரவு கொடுத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்று யமஹா, ராயல் என்ஃபீல்ட், MSI தொழிலாளர்கள் உரிமையின்றி நிறுத்தப்படுவார்களானால், இது நாளை அனைத்து துறைகளிலும் நமக்கு நடக்கும். யமஹா, ராயல் என்ஃபீல்ட், MSI தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவினை மே பதினேழு இயக்கம் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களின் மீதான கைது மற்றும் வழக்கு நடவடிக்கைகளை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு, தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படாவிட்டால், சக ஜனநாயக இயக்கங்களுடன் இணைந்து தொழிலாளர்களுக்கு ஆதரவான ஜனநாயகப் போராட்டங்களை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010