கொட்டும் மழையிலும் தொடர்கிறது யமஹா தொழிலாளர் போராட்டம். யமஹா நிறுவனமே தொழிலாளர் உரிமையை பறிக்காதே! – மே பதினேழு இயக்கம்
தமிழ்நாடு அரசே! தொழிலாளர்களின் பக்கம் நில். தொழிலாளர்கள் மீது கொடும் வழக்குகளை ஏவாதே!
யமஹா நிறுவன ஊழியர்கள் தொழிலாளர் சங்கம் அமைக்ககோரிய விவகாரத்தில், 20.9.2018 அன்று திருபெரும்பத்தூர் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் திட்டமிட்டப்படி நடக்கவிருந்த சந்திப்பில் யமஹா நிர்வாகத்தினர் பங்கேற்கவில்லை. தொடர்ந்து சந்திப்பு 4.10.2018க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சந்திப்பில் பங்கேற்ற யமஹா ஊழியர்கள் சி.பிரகாசு, எம்.ராஜாமணிகண்டன் இருவரையும் எந்த முன்னறிவுப்புமின்றி யமஹா நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்பட்ட 2 ஊழியர்களையும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பணியில் அமர்த்தவேண்டும் என 21.9.2018 முதல் 800க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவந்தனர். 26.9.2018 அன்று நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி போராடும் ஊழியர்களை யமஹா நிறுவன வளாகத்தை விட்டு காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இதனை தொடர்ந்து, ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை யமஹா வளாகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் இன்றுவரை நடத்திவருகின்றனர்.
யமஹா நிர்வாகம் போராடிய ஊழியர்கள் 14 பேர் மீது வழக்குகளை பதிந்துள்ளது. போராட தூண்டியதாக 3 ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்து 02.10.2018 அன்று நள்ளிரவு காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதற்கிடையே, தொழிலாளர் ஆணையம் பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு யமஹா ஊழியர்களையும் எந்த நிபந்தனையுமின்றி நிர்வாகம் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என 03.10.2018 அன்று நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
இதனை கருத்தில் கொள்ளாமல், யமஹா நிர்வாகம் 05.10.2018 அன்றுக்குள் போராட்டம் திரும்பப்பெற்று ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென போராடும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு மிரட்டல் கடிதங்களை அனுப்பி வருகிறது.
1) தொழிலாளர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பணி நீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலாளர்களையும் எந்த நிபந்தனையுமின்றி பணியில் அமர்த்த வேண்டும்.
2) கைது செய்யப்பட்ட 3 தொழிலாளர்களையும் உடனடியாக விடுவித்து பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3) 14 தொழிலாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெற வேண்டும்.
4) யமஹா மனித வள துறையினர் தொழிலாளர்களின் குடும்பத்தாரை மிரட்டும் வகையில் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படும் நோட்டீஸ்களை நிறுத்த வேண்டும்.
யமஹா தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.
– மே பதினேழு இயக்கம்
9884072010