இன்று நடைபெற இருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.

- in பரப்புரை

இன்று நடைபெற இருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு.

மதுரை, வேலூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மே பதினேழு இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு தற்போது தஞ்சாவூர் பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் பெயரில் ஆளுங்கட்சியினர் ஆயிரக்கணக்கான காலி சேர்களுக்கு மத்தியில் கூட்டம் நடத்த அனுமதி, ஈழத்தமிழர்களுக்காக கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லி ஆபாச நடனங்களை மேடையில் அரங்கேற்றிய அதிமுகவின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் ஊர்வலத்தின் பெயரில் வன்முறையை நிகழ்த்தி, தமிழ்நாட்டின் பொது அமைதியையும், சட்ட ஒழுங்கையும் கெடுத்த இந்துத்துவ அமைப்புகளுக்கு தமிழ்நாட்டின் எல்லா மூலைகளிலும் கூட்டம் நடத்த அனுமதி. ஆனால் இதுவரையில் ஒருமுறை கூட வன்முறையில் ஈடுபடாத, மதவாதமோ, பாசிசமோ, சாதியவாதமோ பேசாமல் சமத்துவத்தைப் பேசுகிற மே பதினேழு இயக்கத்தின் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை. எத்தனை பெரிய ஜனநாயக மறுப்பு இது!

தமிழின உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் நடத்த முடியாது, அரசு அடக்குமுறைக்கு எதிரான கூட்டம் நடத்த முடியாது, திருமுருகன் காந்தி கைதைக் கண்டித்து கூட்டம் நடத்த முடியாது என்றால் நாம் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா?

மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தி தலைவர் அரங்க குணசேகரன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அரசுக்கு எதிராக சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படுத்துவார்களாம். அதனால் அனுமதி இல்லையாம். எச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும், இந்துமுன்னணி கும்பலும் தான் அமைதியாகப் பேசி சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர்கள் போல. எச்.ராஜாவினால் பல முறை சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்ட பின்னரும், தொடர்ந்து அவரது கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் மே 17 இயக்கத்தின் கூட்டங்களால் இதுவரை எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.

மேலும் பொதுக்கூட்டத்தில் சில விரும்பத்தகாத சக்திகள் நிகவின்போது ஊடுருவி சட்டம் ஒழுங்கிற்கும், பொது சொத்துக்களுக்கும் சேதம் விளைவிப்பார்கள் என நம்பத்தகுந்த தகவல்கள் காவல்துறைக்கு வந்துள்ளதாம். இப்போதெல்லாம் காவல்துறையினரும் முகநூல் ஸ்டேட்டசை போன்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வந்த தகவல் என கடிதம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழ்நாடு முழுதும் மே பதினேழு இயக்கத்தின் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு ஒரு ஜனநாயக விரோதத்தினையும், அடக்குமுறையினையும் பாரதிய ஜனதா கட்சி அரசும், எடப்பாடி அரசும் சேர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இதனை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையின் அனுமதி மறுப்பின் காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply