சிறையில் தொடரும் மனித உரிமை மீறலால் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
45 நாட்களாக தோழர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் தனி அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். பகலில் கூட சிறையில் இருக்கும் மற்றவர்களை அவர் சந்திக்கவோ, பேசவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவர் சிறை வைக்கப்பட்டிருக்கும் தனி சிறை அறையானது கடந்த இரண்டு ஆண்டு காலமாக எவருமே தங்காத பழைய கட்டிடமாகும். அந்த அறையில் காற்றோட்டம் கூட சரியாக இல்லாததால் தோழருக்கு சுவாசக் கோளாறு பிரச்சினையும் அவ்வப்போது ஏற்பட்டுள்ளது.
தூசி படிந்த, பூச்சிகள் பெருமளவில் நுழையும் சுகாதாரமற்ற அறையாக தோழர் தங்கியிருக்கும் சிறை அறை இருக்கிறது. அறைக்கு அருகில் புதர் மண்டியிருப்பதால் ஒரு நாள் பகல் நேரத்தில் பாம்பு ஒன்று தோழரின் அறைக்குள் நுழைந்திருக்கிறது. பகல் நேரமாக இருந்த காரணத்தினால் தோழரால் அதனை கவனித்து விரட்ட முடிந்திருக்கிறது.
முறையான உணவும் வழங்கப்படுவதில்லை. நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும் நேரத்திலும் மதிய நேரத்தில் உணவு பெரும்பாலான நேரங்களில் வழங்கப்படுவதில்லை. சிறைக்குள் வழங்கப்படும் உணவும் சுகாதாரமான உணவாக இருப்பதில்லை. பல நேரங்களில் வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. நேற்று முந்தினம் சனி காலை சிறையில் வழங்கப்பட்ட சேமியாவினை உண்டுவிட்டு உள்ளே நின்றிருந்த போது தோழர் திருமுருகன் காந்தி சிறைக்குள் மயங்கி விழுந்திருக்கிறார். அப்போது அந்த வழியே வந்த காவல் பணியாளர் ஒருவர் எதேச்சையாக பார்த்து அவரை தோளில் தூக்கி சென்று சிறை மருத்துவரிடம் கொண்டு சென்றிருக்கிறார்.
தொடர்ச்சியான சுகாதாரமற்ற உணவாலும், காற்றோட்டம் இல்லாததாலும் தோழரின் உடல் நிலை கடந்த சில நாட்களாக மிகவும் நலிவுற்றிருக்கிறது. நேற்று கூட சிறை மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். இன்று திங்கள் கிழமை என்பதால் சிறையில் மனுபோட்டு தோழரை சந்திக்க இயக்கத் தோழர்களும், குடும்பத்தினரும் சென்ற போதுதான், இன்று தோழரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பது தெரிய வந்தது. இன்றும் அவரது உடல் நிலைக் குறைவு குறித்த எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
இன்று அடுக்கம்பாறை மருத்துவமனையில், முதலில் தோழர் திருமுருகன் காந்தியை பரிசோதித்த மருத்துவர் இரண்டு நாட்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தவர், பின்னர் சிறிது நேரம் கழித்து என்ன காரணத்திற்காக அனுமதிக்க தேவையில்லை என்று சொன்னார் என்பது தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடாது என்று எவரிடமிருந்து அழுத்தம் வந்தது என்பதும் தெரியவில்லை. முறையான உணவு இல்லாததால் திருமுருகன் காந்தி அவர்களுக்கு ரத்த சர்க்கரை குறைவும், ரத்த அழுத்தக் குறைவும் ஏற்பட்டுள்ளது.
மக்களுக்காக போராடி அரசியல் விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களின் மீது சிறையில் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டிக்கும் அதே நேரத்தில், இவை தொடரும் பட்சத்தில், தமிழக அரசினை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டி மிகப் பெரிய அளவிலான ஜனநாயகப் போராட்டத்தினை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சிறைத்துறை அதிகாரிகளின் சட்டத்துக்கு புறம்பான மனித உரிமை மீறல் கொண்ட இச்செயலை கண்டிப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உடனடியாக தோழர் திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் அனுமதித்திடு!
அனைத்து ஜனநாயக கட்சிகளும், இயக்கங்களும் தோழர் திருமுருகன் காந்தி மீது சிறையில் நிகழும் இந்த மனித உரிமை மீறல்களை கண்டித்திட வேண்டும் என மே பதினேழு இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010