திருநெல்வேலி பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு தற்போது புதுக்கோட்டை பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு வேலூரிலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் ஒப்புதலின் அடிப்படையில் தான் கூட்டத்திற்கான பிரச்சாரங்களும், செலவுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடைசி நேரங்களில் அனுமதியினை மறுத்து ஜனநாயக மறுப்போடு சேர்த்து நிதிச் சுமையையும் திணிக்கிறார்கள்.
திருமுருகன் காந்தி அவர்கள் மீது சென்னை மெரீனாவில் வழக்கு நிலுவையில் உள்ளதாம், அதனால் புதுக்கோட்டையில் அனுமதி இல்லையாம். எத்தனை பெரிய கொடுமை இது? வழக்கு நிலுவையில் உள்ளது என்று அவர்களே தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்றால் அவர் மீதான குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பது தான் அர்த்தம். குற்றம் நிரூபிக்கப்படாத ஒரு வழக்கினை காரணம் காட்டி, (அதுவும் நினைவேந்தல் நடத்திய வழக்கு) எப்படி காவல்துறை, சென்னையிலிருந்து வெகு தூரத்திலுள்ள புதுக்கோட்டையில் நடத்த அனுமதி மறுக்க முடியும்?
அடுத்ததாக பொதுக்கூட்டத்தில் ”சில விஷமிகள் கலந்துகொண்டு சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருவதாலும்” என்று பாஜகவினரைப் போன்ற ஒரு கடிதத்தினை தமிழ்நாடு காவல்துறை அளித்திருக்கிறது. விஷமிகள் என்பவர்கள் யார் என்பதை காவல்துறை அடையாளப்படுத்த வேண்டாமா? ரஜினிகாந்தும், எச்.ராஜாவும் சொல்வதைப் போல் சமூகவிரோதிகள், விஷமிகள் என்று ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தில் போகிற போக்கில் காவல்துறை தெரிவிப்பது எப்படி சரியாக இருக்கும்?
ஒரு வேளை கூட்டத்தில் கலந்து கொண்டு சீர்குலைக்க வாய்ப்புள்ள சக்திகள் சங்க் பரிவார் கூட்டத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்றால் அதன் மீதான விசாரணையை காவல்துறை மேற்கொள்ள வேண்டாமா?
கூட்டம் நடத்தக் கோரியுள்ள இடத்தின் அருகில் வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், கோவில், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளதாம். இவையெல்லாம் தெரிந்து தானே அந்த பகுதியை பொதுக்கூட்டம் நடத்துவதற்கான பகுதியாக காவல்துறை ஒதுக்கியுள்ளது. இதுவரையில் புதுக்கோட்டை திலகர் திடலில் எந்த பொதுக்கூட்டமும் நடத்தப்படுவது இல்லையா? எல்லா பொதுக்கூட்டங்களும் திலகர் திடலில் நடத்தப்படும் போது மே பதினேழு இயக்கம் நடத்துவதில் காவல்துறைக்கோ, தமிழக அரசுக்கோ என்ன பிரச்சினை?
இவற்றையெல்லாம் காரணம் காட்டி 1861ம் ஆண்டின் Police Act புதுக்கோட்டையில் அமலில் உள்ளதால் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
1861ம் ஆண்டின் காவல்துறை சட்டத்தை மதிப்பது நம்முடைய கடமை என்பதால் மே பதினேழு இயக்கம் தனது கூட்டத்தினை 1861ம் ஆண்டின் சட்டத்தை மதித்து ஒத்தி வைக்கிறது.
மீண்டும் பொதுக்கூட்டத்தினை மற்றொரு தேதியில் நீதிமன்றம் வாயிலாக அனுமதி பெற்று அதே இடத்தில் நடத்திட மே பதினேழு இயக்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010