Demonetization எனும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும்,
2016ம் ஆண்டு கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது, அதனைக் கண்டிக்காத மத்திய அரசினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கும்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சாஸ்திரி பவன் முன்பு போராட்டம் நடத்தியதற்கும்,
கடந்த ஆண்டு தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் இலங்கை தூதரக முற்றுகை நடத்தப்பட்ட போது, அதற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்து டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட வழக்கிற்கும்,
என 4 வழக்குகளுக்கு அல்லிகுளம் நீதிமன்றத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அழைத்து வரப்பட்டார்.
அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 4 வழக்குகளுக்கும் பி.டி வாரண்ட் பிறப்பித்து தேடப்படும் குற்றவாளியைப் போல காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதனை பார்த்த நீதிபதி, இதுவரையில் இந்த வழக்கில் திருமுருகன் காந்திக்கு சம்மன் ஏதும் வழங்கப்படாத போது பி.டி வாரண்ட் எப்படி பிறப்பிக்க முடியும் என்றும், எந்த வழிமுறையின் அடிப்படையில் இப்படி அழைத்து வந்தீர்கள் என்றும் காவல்துறையினரைக் கண்டித்து அந்த 4 பி.டி வாரண்ட்களையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
பிறகு அங்கிருந்து திருவொற்றியூர் அழைத்துச் செல்லப்பட்டார். கடந்த ஆண்டு சிறையில் இருந்து விடுதலை ஆன போது புழல் சிறைக்கு வெளியில் உள்ள பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பேசியதாக போடப்பட்ட இரண்டு தேசத்துரோக வழக்குகளுக்கு திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.