திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தும் அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தும், விடுதலை செய்த பிறகு சட்டவிரோதமாக ஆட்கடத்தலைப் போன்று கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்யக் கோரியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று 14-8-18 நடத்தப்பட்டது.

இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, SDPI கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொறுப்பாளர் அருணபாரதி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் சுந்தர்ராஜன், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, டிசம்பர் 3 இயக்கத்தின் பொறுப்பாளர் சரவணன், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அருள்முருகன், பிரவீன்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

சந்திப்பில் வழங்கப்பட்ட பத்திரிக்கையாளர் குறிப்பு பின்வருமாறு:

மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை உடனே விடுதலை செய்!

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை குறித்து ஐ.நாவில் பேசியதற்காக அவர் இந்தியா திரும்புகையில், பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து 9-8-2018 வியாழன் அன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். நாடு முழுதும் விமான நிலையங்களில் திருமுருகன் காந்தியை கைது செய்ய Look Out Circular(LOC) காவல்துறை அனுப்பி இருந்தது. பெங்களூரில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியை எவரையும் சந்திக்க அனுமதிக்காமல் கெடுபிடிகள் செய்யப்பட்டன. காலை 3.30 மணியளவில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருந்தும் 19 மணிநேரம் கழித்து இரவு 10 மணிக்கு மேல் தான் தமிழ்நாடு காவல்துறையினர் திருமுருகன் காந்தியை பெங்களூருக்கு வந்து தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

பின்னர் இரவு பெங்களூரில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் 10-8-2018 வெள்ளி காலை 8 மணியளவில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தின் அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு கொண்டு வரப்பட்டார். பின் அங்கிருந்து அவரை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட காவல்துறை வாகனம் எங்கே சென்றது என தெரிவிக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. இரண்டு மணிநேரத்திற்கு பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு செல்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

காலை 11 மணிக்கு மேல் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு திருமுருகன் காந்தி கொண்டுவரப்பட்டார். ஐ.நாவில் ஸ்டெர்லைட் படுகொலையை எதிர்த்து திருமுருகன் காந்தி பேசியதாகவும், அந்த காணொளியினை சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், மேலும் அவர் பேசியதன் மொழிப்பெயர்ப்பு இணையதளங்களில் பெருமளவில் பரவியதாகவும், இதன் மூலம் அவர் மக்களை தூண்டிவிட்டதாகவும் அவர் மீது பிரிவு 153, 505(1)(b), 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குகளை பதிந்திருந்தனர். ஆளும் அதிமுகவின் ஐடி விங் இந்த புகாரினை அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பிரகாஷ் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது என தெரிவித்ததுடன், ஐ.நா மன்றத்தில் ஒருவர் பேசியதற்கு அவரை எவ்வாறு கைது செய்ய முடியும் என்றும், ஐ.நாவில் இந்தியாவும் ஒரு உறுப்பு நாடாக இருக்கிறது தானே என்றும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்விகளை எழுப்பினார்.

24மணி நேர விசாரணை காலக்கெடு முடிந்தவுடன் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் எழும்பூர் பழைய கமிசனர் அலுவலகத்திலிருந்து முறையாக கையெழுத்து பெறப்பட்டு திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் அந்த வளாகத்தை விட்டு வெளியே வரும்போது 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவரை சூழ்ந்து கொண்டு குண்டுகட்டாக தூக்கினர். எதற்காக என்னை கைது செய்கிறீர்கள், அதற்கான ஆணை உங்களிடம் இருக்கிறதா என்று திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பிய பின்னரும் பதில் சொல்லாமல் அவரை வாகனத்தில் இழுத்து ஏற்றிச் சென்றனர். ஒரு ஆட்கடத்தல் சம்பவத்தினைப் போன்றே இந்த கைது நிகழ்த்தப்பட்டது. திருமுருகன் காந்தியை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என வழக்கறிஞர்கள் கேட்ட பின்னரும் எந்த பதிலும் சொல்லாமல் வண்டியை கிளப்பிச் சென்றனர்.

பின்னர் திருமுருகன் காந்தியை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருக்கிறார்கள் என்பதை மே பதினேழு இயக்கத்தினர் தேடிக் கண்டுபிடித்தார்கள். 2017ஆம் ஆண்டு திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலையான போது ராயப்பேட்டையில் பெரியார் சிலைக்கு அனுமதி இல்லாமல் கூட்டமாக வந்து மாலை போட்டதாக அவர் மீது பிரிவு 188, 143, 353 ஆகிய பிரிவுகளின் கீழ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளுடன் பிரிவு 124-A என்கிற தேசத்துரோக வழக்கையும், பிரிவு 153ஐயும் சேர்த்து திருமுருகன் காந்தியினை காவல்துறையினர் கைது செய்தனர்.

அங்கிருந்து இரவு 11 மணியளவில் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி அங்காளேஸ்வரி அவர்களின் முன்பு நிறுத்தப்பட்டு திருமுருகன் காந்தி 15 நாள் சிறைக் காவலில்புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அடுத்த நாள் காலையில் திருமுருகன் காந்தியின் தந்தைக்கோ, வழக்கறிஞருக்கோ எந்த தகவலும் கொடுக்காமல் அவர் புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். வழக்கறிஞர்கள் திருமுருகன் காந்தியை சந்திக்க சென்ற போது அவர் அங்கு இல்லை என்றும், வேலூர் சிறைக்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

திருமுருகன் காந்தி குறித்து 13-8-2018 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கினை அவரச வழக்காக எடுத்து விசாரித்து திருமுருகன் காந்தி தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம் அரசு தரப்பு நாளையே(14-8-2018) உரிய பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தற்போது திருமுருகன் காந்தி அவர்களை நேற்று(14-8-18) மேலும் மூன்று வழக்குகளில் காவல்துறை கைது செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு குண்டர் சட்டத்திலிருந்து வெளியே வந்த போது புழல் சிறைக்கு வெளியே இருந்த பெரியார் சிலைக்கும், அம்பேத்கர் சிலைக்கும் அனுமதி இன்றி சென்று மாலை அணிவித்ததாகவும், பேசியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளிலும் தேசத்துரோக வழக்கான பிரிவு 124-A சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து ஐ.நா நிபுணர் குழுவான Working Group on Arbitrary Detention இந்த அரசிற்கு கேள்வி எழுப்பி அறிக்கை அளித்ததுடன், திருமுருகன் காந்தி 4 மாதங்கள் தவறான முறையில் சிறையில் அடைக்கப்பட்டதற்கு நஷ்ட ஈடு ஏதேனும் வழங்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. இதுவரை அதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இந்நிலையில் அவர் மீது மேலும் அடக்குமுறைகளை தொடர்வது என்பது இந்திய அரசு தான் கையெழுத்திட்ட சர்வதேச உடன்படிக்கைகளை மதிக்கிறதா, இல்லையா என்ற கேள்வியினை எழுப்பியுள்ளது.

ஐ.நா வரையிலான சர்வதேச மட்டங்களில் உரையாடுகிற ஒரு அரசியல் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர் மீது எதற்காக இத்தனை அடக்குமுறைகள் நிகழ்த்தப்பட வேண்டும்?

ஒரு பயங்கரவாதியைப் போல் Look Out Circular(LOC) கொடுத்து கைது செய்யும் அளவிற்கு என்ன குற்றத்தினை திருமுருகன் காந்தி செய்திருக்கிறார்?

சட்டப்படி செயல்படாமல், சட்டவிரோதமாக ஆட்கடத்தல் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வருகிறது?

வேதாந்தா நிறுவனத்தையும், தூத்துக்குடியில் 13பேரை படுகொலை செய்த அரச பயங்கரவாதத்தையும் சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியதாலேயே திருமுருகன் காந்தி மீது இந்த பழிவாங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஐ.நா வில் பேசியதற்கு சிறையில் வைக்க முடியாது என்று நீதிமன்றம் சொன்னாலென்ன, வேறு வழக்கில் சிறை வைக்கிறேன் பார் என்று ஒரு பாசிச அடக்குமுறையினை பாஜக மற்றும் எடப்பாடி அரசின் கூட்டணி செய்து வருகிறது.

பெரியார் சிலைக்கு போய் மாலை அணிவித்தால், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தால் அது தேசத்துரோக குற்றமா?

இங்கு உண்மையில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்ற கேள்வியினை முன்வைக்க விரும்புகிறோம். திருமுருகன் காந்தி முன்னெடுத்த அனைத்து போராட்டங்களுக்கும் தொடர்ச்சியான பொய் வழக்குகளை போட்டு அவரின் விடுதலையை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசினை பாரதிய ஜனதா கட்சி அரசு பின்னிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது.

திருமுருகன் காந்தி மீது நிகழ்த்தப்படும் இந்த பாசிச அடக்குமுறைக்கு எதிராக அனைவரும் கைகோர்க்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது. திருமுருகன் காந்தி மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகள் போடுவதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ் மக்களைக் காக்கும் பணியில் மே பதினேழு இயக்கம் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை என்றும், மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமுருகன் காந்தியின் மீதான அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply