தோழர் திருமுருகன் கைதை கண்டித்து உயர்திரு நீதிபதி ஹரிபரந்தாமன் அறிக்கை
தூத்துக்குடி படுகொலையை மனித உரிமை மீறல் என்று உலகின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்தார் திருமுருகன் காந்தி.
திருமுருகன் காந்தியின் செயல் இ.த.ச (IPC) பிரிவு 124A-இன் கீழ் “தேசவிரோத குற்றம்” (sedition) என்று சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்தது; அனைத்து விமான நிலையங்களுக்கும் “லுக் அவுட் நோட்டீஸ்” அனுப்பியது.
09.08.2018 அன்று விடியற்காலை 3:45 மணிக்கு ஜெனீவாவில் இருந்து பெங்களூர் வந்த திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். திருமுருகன் காந்தியை கைது செய்தது தமிழ்நாடு அரசின் மனித உரிமை மீறல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சுதந்திர போராட்ட வீரர்களை கைது செய்வதற்காக 1870-ஆம் ஆண்டில் இ.த.ச-வில் 124A பிரிவாக சேர்க்கப்பட்ட பிரிட்டிஷ் அரசின் சட்டம் சுதந்திர இந்தியாவில் இருப்பது அவமானத்திற்குரியது. தொடர்ந்து இந்த சட்டப்பிரிவு 124A தவறாக பயன்படுத்தப்படுவதால் இது சட்டப்புத்தகத்தில் இருந்தே நீக்கப்பட வேண்டும்.
விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி போன்றவர்களை கைது செய்யாமல் வெளி நாட்டிற்கு தப்பி செல்ல அனுமதித்த அரசு இயந்திரம், தாய்நாடு திரும்பிய திருமுருகன் காந்தியை விமான நிலையத்தில் “லுக் அவுட் நோட்டீஸ்” அடிப்படையில் கைது செய்தது அராஜகச்செயல்.
10.08.2018 அன்று சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்னர் திருமுருகன் காந்தியை நிறுத்தி, தேச விரோத குற்ற வழக்கில் புலன்விசாரணை செய்வதற்காக அவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க கோரியது சென்னை போலீஸ்.
ஐ.நா. மன்றத்தில் திருமுருகன் காந்தி பேசியது எப்படி தேச விரோத குற்றச்செயல் ஆகும் என்று போலீசாரிடம் கேள்வி எழுப்பிய மாஜிஸ்திரேட் பிரகாஷ் அவர்கள் போலீசின் கோரிக்கையை நிராகரித்து திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுத்து விடுவித்தார். மாஜிஸ்திரேட் பிரகாஷ் பாராட்டுக்குரியவர்.
சில மாதங்களுக்கு முன்னர் தடை உத்தரவை மீறி ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி சென்னையில் கூட்டம் நடத்தினார் என்ற வேறு ஒரு வழக்கில் திருமுருகன் காந்தியை மீண்டும் கைது செய்தது சென்னை போலீஸ்.
ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான தனது நிலையை இதன் மூலம் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்திவிட்டது.
திருமுருகன் காந்தியை எப்படியாகிலும் சிறையில் அடைப்பேன் என்ற தமிழ்நாடு அரசின் அடக்குமுறை நடவடிக்கை கண்டனத்துக்குரியது.
உயர்திரு நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.