மோடி-எடப்பாடி கூட்டணியின் உச்சகட்ட அடக்குமுறை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
காஞ்சிபுரத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பாக துண்டறிக்கை கொடுக்கச் செல்லும் போது 19 தோழர்கள் தடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணத்திற்காக பயன்படுத்திய வேனையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
எட்டு வழி சாலைக்கு எதிராக மக்கள் தினம் தினம் அந்தந்த பகுதிகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தற்கொலை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கண்முன்னே நம் சொந்த உறவுகள் கதறி அழுவதைப் பார்த்து, அவர்களுக்கு ஆதரவாக கேள்வி கேட்டால் சிறை என்று மிரட்டுகிறது இந்திய பாஜக அரசும், தமிழக எடப்பாடி அரசும்.
அந்த மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு முழுவதும் எங்கேயும் அனுமதி தரப்படுவதில்லை. போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதால், கருத்துரிமை அடிப்படையில் பிரச்சாரம் செய்கிற தோழர்களையும் காவல்துறை கைது செய்து வருகிறது.
ஒரு திட்டம் குறித்து பேசவே கூடாது என்பது, ஜனநாயகம் பாசிஸ்டுகளால் களவாடப்பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது. எங்கள் மக்களின் நிலத்தை அவர்களின் அனுமதியின்றி பிடுங்குவதற்கும், எங்கள் மக்கள் பாதுகாத்த காடுகளை அவர்களின் அனுமதியின்றி அழிப்பதற்கும், எங்கள் மக்களைப் பாதுகாக்கும் மலைகளை அவர்களின் அனுமதியின்றி உடைப்பதற்கும் மோடிக்கும், எடப்பாடிக்கும் யார் உரிமையைத் தந்தது?
துண்டறிக்கைகளை விநியோகிக்கும் முன்பாகவே துண்டறிக்கை வைத்திருந்தார்கள் என்று சொல்லி வேனை பறிமுதல் செய்திருக்கிறார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம், திராவிடர் விடுதலைக் கழகம், பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் மற்றும் விவசாய அமைப்பைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 19 பேர் கடுமையான வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தோழர்கள்:
ச.தீனன் என்ற தினேஷ், மகேஷ், ஜெசி குளோரி, ரேச்சல் என்ற கனல்விழி, யோகநாதன் என்ற காஞ்சி அமுதன், அர்விந்த், ஜெயராமன் என்ற உலக ஒளி, சாந்தி, ஆனந்தி, முருகானந்தம், வெற்றித்தமிழன் என்ற விஜயகுமார், தாண்டவமூர்த்தி, பழனி, ரவி பாரதி, செல்வராஜ், சுப்பிரமணி, சந்திரன், அல்லி மற்றும் எழிலரசன்
இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து இயக்கங்களுக்கும், மக்களும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தினைக் காக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டிய தருணம் இது.
இந்த அடக்குமுறைகளை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
மோடி அரசே! எடப்பாடி அரசே! அத்துமீறாதே! இவர்கள் மக்களின் தோழர்கள்! உடனே விடுதலை செய்! மக்களின் குரலுக்கு மதிப்பு கொடு!
– மே பதினேழு இயக்கம்
9884072010