ஒரு மாதத்திற்கும் மேலாக மே பதினேழு இயக்கத்தின் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

ஒரு மாதத்திற்கும் மேலாக மே பதினேழு இயக்கத்தின் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு

தூத்துக்குடி படுகொலைக்கு பின்பும், எட்டு வழி சாலை திட்டத்தினை மக்கள் எதிர்ப்பை மீறி அரசு செயல்படுத்த ஆரம்பித்த பின்பும், மே பதினேழு இயக்கம் திட்டமிடும் அனைத்து கூட்டங்களுக்கும் தமிழக அரசு அனுமதியினை மறுத்து வருகிறது.

மதுரையில் நடத்த திட்டமிட்டிருந்த கூட்டத்திற்கு இரண்டு முறை அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் நடத்த திட்டமிருந்த கூட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தெருமுனைக் கூட்டங்களுக்கு கூட அனுமதி மறுத்திருக்கிறார்கள். பள்ளிக்கரணை, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தவிருந்த தெருமுனைக் கூட்டங்கள் அனுமதி மறுத்து தடுக்கப்பட்டிருக்கின்றன. மே பதினேழு இயக்கத்தின் பெயரில் எந்த கூட்டத்திற்கு அனுமதி கேட்டாலும், இல்லை என்று காவல்துறை தொடர்ச்சியாக சொல்லி வருகிறது.

ஆனால் அதே சமயம் இந்து முன்னணியும், பாஜகவும் எந்த தடையுமின்றி கூட்டங்களையும், மாநாட்டையும் நடத்தி வருகிறார்கள்.

மக்கள் இயக்களுக்கான பேச்சுரிமை தடுக்கப்பட்டு திட்டமிட்ட உரிமை மீறல் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாஜக அரசின் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, மக்கள் இயக்கங்களை முடக்கும் வேலைகளை செய்து வருகிறது. கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, இயக்கத்தின் தோழர்களின் வீடுகளுக்கும், வேலை செய்யும் அலுவலகங்களுக்கும் சென்று அச்சுறுத்துவது என்று அத்துமீறல்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இந்த அடக்குமுறைகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள மே பதினேழு இயக்கம் தயாராக இருக்கிறது.

இவற்றையெல்லாம் மீறி மே பதினேழு இயக்கம் எப்போதும் தமிழ் மக்களுடன், தமிழர்களுக்காக நிற்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply