இலங்கையின் இறுதிப் போரில் காணாமல் செய்யப்பட்ட தமிழர்களின் உறவுகள் தங்களுக்கு நிகழ்ந்த அநீதியைப் பற்றி ஐ.நாவில் முறையிட வந்த போது இலங்கை அதிகாரிகள் அதிகாரத் திமிருடன் ஐ.நா அரங்கிற்குள் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
https://www.youtube.com/watch?v=y5yrKVKJDc0
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும் போதும், “நீங்கள் யார் இலங்கையைப் பற்றி பேசுவதற்கு” என்று கூச்சலில் அவர்கள் ஈடுபட்டனர். இது ஐ.நா மனித உரிமைகள் அவை. நாங்கள் மனித உரிமை காப்பாளர்கள். இது ஒன்றும் இலங்கையல்ல. இங்கு யார் வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேச முடியும் என்று திருமுருகன் காந்தி அவர்களைக் கண்டித்தார். தொடர்ச்சியாக சம்மந்தமில்லாத அரசியல் நோக்குடனான கேள்விகளை திருமுருகன் காந்தியை நோக்கி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். அதற்கு திருமுருகன் காந்தி சரியான முறையில் பதிலளித்தவுடன் அமைதியானார்கள்.
தனது மகனை இராணுவத்திடம் சரணடையக் கொடுத்துவிட்டு, இன்று வரை தேடிக் கொண்டிருக்கும் அம்மாவையும் பேசவிடாமல் தடுத்து அச்சுறுத்தலில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் சிங்கள அதிகாரிகள் தகராறு செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக தமிழர்களின் பக்க அரங்க கருத்தரங்கு நிகழ்வில், சேனல் 4 ஆவணப்படம் வெளியிடப்பட்ட போதும் கத்திக் கொண்டே இருந்தனர். அவர்களை அறையிலிருந்து வெளியேற சொன்ன போதும் வெளியேறாமல் இலங்கையிலிருந்து பேச வந்த பாதிக்கப்பட்ட தமிழர்களை மிரட்டும் நோக்கில் தொடர்ச்சியான தகராறில் ஈடுபட்டனர்.
திருமுருகன் காந்தி அவர்களுடனும் தொடர்ச்சியான தகராறில் ஈடுபட்டனர். நீங்கள் அரசு சார்பாக வந்திருக்கிறீர்களா அல்லது ஏதேனும் அமைப்பு சார்பாக வந்திருக்கிறீர்களா என திருமுருகன் காந்தி, அந்த நபர்களைப் பார்த்து கேட்டதற்கு, பதில் சொல்லாமல் கத்திக் கொண்டே இருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை மிரட்டுகிறார்கள் என ஐ.நாவில் இருந்த காவலர்களிடம் தமிழர்கள் முறையிட்டதன் அடிப்படையில் இலங்கை அதிகாரிகள் அனைவரும் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதில் மன உளைச்சலுக்கு ஆளான அம்மா செல்வராணி அவர்கள் அரங்கிற்கு உள்ளேயே மயங்கி விழுந்தார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இலங்கையிலிருந்து சாட்சி சொல்ல வந்தவர்கள் திரும்பி இலங்கைக்கு செல்கையில் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது என்பதை இச்சம்பவம் நமக்கு காட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமை அவைக்குள்ளேயே மிரட்டலில் ஈடுபடும் இலங்கை அரசின் இந்த அதிகாரத் திமிர் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டியது. இந்த செய்தியினையும், காணொளியினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம்.
– மே பதினேழு இயக்கம்
9884072010